122
அன்று இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தந்தையுடன் இருக்கிறான். செழியன்.
அடுத்த நாள் காலை சரவணனுக்கு தேவையானவற்றை கவிதாவும், லட்சுமியும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
அங்கு செழியனை வீட்டில் போய் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மதியம் வருமாறு கேட்கிறாள் லட்சுமி.
அதற்கு செழியன் “இப்போது எனக்கு ஓய்வு தேவை இல்லை அதனால் இங்கேயே குளித்துவிட்டு தந்தையுடன் இருக்கிறேன். நான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் அவரை பார்த்து விட்டு கிளம்புங்கள்.
இல்லை என்றால் அவருக்கு ஒரு நோயாளி போன்ற மனப்பான்மை உருவாகிவிடும்.”
அவர்களும் செழியன் சொன்னவாறு சரவணன் கண் விழித்ததும் பார்த்துவிட்டு கிளம்புகிறார்கள்.
சரவணன் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று கண்விழித்து அருகிலுள்ள செழியனின் கைவிரல்களை பிடிக்கிறார்.
சரவணன் ஏதோ பேச உணர்ந்த செழியன், “சொல்லுங்கள்! அப்பா ஏதாவது சொல்ல வேண்டுமா???”
என்று கேட்க..
” சிறிதுநேரம் என்னை உட்கார வை எனக்கு ஏதோ போல் இருக்கிறது.”
சரவணன் சொன்னதும் படுக்கையிலிருந்து உட்கார நிலையில் வைக்கிறான்.
உட்கார்ந்ததும் சிறிது நேரத்தில் “நான் உன்னிடம் சிறிது நேரம் பேச வேண்டும்.”
“இப்பொழுது நீங்களே உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறீர்கள் .அப்படி பேசுகிற அளவுக்கு என்ன அவசியம் இருக்கிறது???”
“அவசியம் இருப்பதால் தான் சொல்கிறேன்.”
“சொல்லுங்கள்!!!..”
என்றதும். சரவணன் “நான் உன்னிடம் ஒன்று கேட்பேன் என்னிடம் நீ உண்மையை மட்டும் சொல்ல வேண்டும்.
கண்டிப்பாக சொல்கிறேன் கேளுங்கள்.”
“நீயும், கார்குழலி யும் ஒன்றாக பேசிக்கொண்டிருந்ததை நம் உறவினர் சில பேர் பார்த்து என்னிடம் சொன்னார்கள். அதுமட்டுமில்லாமல் நானும் உன்னை அவளுடன் நீ உன் வண்டியில் ஏற்றிக் கொண்டு போகும் போது பார்த்தேன். உன் வாழ்க்கையில் கார்குழலி என்பது முடிந்துவிட்ட பக்கம் அதனால் அந்த பக்கத்தை நீ திருப்பி கூட பார்க்க கூடாது. ஏனென்றால் உனக்கென்று தேவியும் ரத்தினமும் இருக்கிறார்கள்.
நீ ஏதாவது செய்வதென்றால் அது உனது எதிர்காலத்தை பாதித்து விடும்.”
“அப்பா நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை……இரண்டு மூன்று முறை அவளுக்கு அவசரமான சூழ்நிலை என்பதால் அவளை நான் தான் வண்டியில் கூட்டிக் கொண்டு சென்றேன். மற்றபடி வேறொன்றும் இல்லை.”
“சரி அப்படி என்றால் இனி அவளுடன் பேசுவதை நிறுத்தி விடு…..”
“ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதால் மட்டுமே நான் அவளிடம் பேசுகிறேன். இனி நீங்கள் சொல்வதால் அது கூட செய்ய மாட்டேன்.”
அப்பாவின் உடல்நிலை சரியாகும் வரை கார்குழலி உடன் பேசுவது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தான்.
இப்படியே இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே தொடர்கிறது.
இன்று மூன்றாவது நாள் மருத்துவர் சரவணனை பரிசோதித்துவிட்டு சரவணன் போடவேண்டிய மருந்துகளை செழியனிடம் சொல்லிக் கொடுக்கிறார்.
அதேபோன்று அவருக்கு எந்தவிதமான அதிர்ச்சியான சம்பவங்களை அவரிடம் சொல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
உடனே தனக்கும் கார்குழலி க்கும் நடந்த திருமணத்தை நினைத்து பயப்படுகிறான்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment