ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா நிகழ்த்திய சாதனைகளை மற்றொரு நாடு நிகழ்த்த இனியொரு யுகம் வேண்டும் என்றே சொல்லலாம்.
ஒலிம்பிக் ஹாக்கியில் அரை நூற்றாண்டு இந்தியா கொடி கட்டிப் பறந்திருக்கிறது. 1928-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தொடங்கி 1980-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரை 52 ஆண்டுகள் ஹாக்கி விளையாட்டியில் பெருசக்தியாக ஜொலித்திருக்கிறது இந்தியா. இந்த காலகட்டத்தில் 8 தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறது இந்திய அணி, 1960-ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும், 68, மற்றும் 72-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களையும் வென்றது இந்திய அணி.
கடைசியாக ஹாக்கியில் இந்தியா ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது 1980-ல். தமிழகத்தை சேர்ந்த வாசுதேவன் பாஸ்கரன் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. இதன்பின்னர் 41 ஆண்டுகளாக இந்தியாவின் பதக்க கனவு என்பது கானல் நீராகவே உள்ளது. டோக்யோ ஒலிம்பிக்கில் ஆடவர், மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் கலந்து கொள்ள இந்திய அணி தகுதிபெற்றுவிட்டது. சர்வதேச தரநிலையில் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 6 ஆவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, 7 ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்து, 8 ஆவது இடத்தில் உள்ள நியுசிலாந்து, ஒன்பதாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் ஆகிய அணிகளும் சர்வதேச அளவில் சவால் நிறைந்ததாகவே உள்ளன. மகளிர் ஹாக்கியில் இந்திய அணி சர்வதேச அளவில் 9 ஆவது இடத்தில் உள்ளது.
சவால் நிறைந்த ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி பழைய வரலாறை, பதக்க வரலாறை மீண்டும் வசப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.