ஒலிம்பிக் பளுதூக்குதலில் தங்கம் வென்ற சீனாவின் ஜிஹுய் ஹூக்கு ஊக்க மருந்து பரிசோதனை: மீராபாய் சானுவின் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் ஜிஹுய் ஹூக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கின் 2வது நாளில் நடைபெற்ற இப்போட்டியில் சீனாவின் ஜிஹுய் ஹூ புதிய ஒலிம்பிக் சாதனையுடன் ஒட்டுமொத்தமாக 210 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் அவரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை முடிவு செய்துள்ளது.
இதற்காக ஜிஹுய் ஹூ, டோக்கியோ நகரிலேயே தங்கியிருக்க அறிவுறுத் தப்பட்டுள்ளார். போட்டி நடைபெற்று 2 நாட்கள் முடிவந்த நிலையில் ஜிஹுய் ஹூவிடம் ஊக்க மருந்து சோதனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தால், வெள்ளி வென்ற வீரருக்கு தங்கம் வழங்கப்படும் என விதிகள் தெளிவாக உள்ளன. இதனால் ஜிஹுய் ஹூ, ஊக்க மருந்து சோதனையில் வெற்றி பெறத் தவறினால் அவரது பதக்கம் பறிக்கப்படும். மேலும் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானுவின் பதக்கம் தங்கமாக தரநிலை உயர்த்தப்படும்.