இந்தியா

ஒரே குடும்பத்தை சுற்றி வரும் கட்சி அல்ல பாஜக: தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

85views

பாஜக ஒரே குடும்பத்தை சுற்றி வரும் கட்சி அல்லஎன்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாஜகவின் தேசிய செயற்குழுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பஞ்சாப் மாநில பாஜக தலைவர் ஆகியோர் தேர்தல் வெற்றிக்கு வகுக்கப்பட்டிருக்கும் வியூகங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாபல்வேறு துறைகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை, மூன்று தாரக மந்திரங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. அவை சேவை, உறுதி, அர்ப்பணிப்பு ஆகும். ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்தே, சாமானிய மக்களின் நலனுக்காக உழைத்து வரும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. ஒரே குடும்பத்தை சுற்றி வரும் கட்சி அல்ல. அதனால் தான்,பாஜக இன்று மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒன்றை கூறிக் கொள்கிறேன். பொதுமக்களுக்கும், கட்சிக்கும் இடையே ஒரு நம்பிக்கை பாலமாக நீங்கள் செயல்பட வேண்டும். மக்கள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அவர்களிடத்தில் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறப் போவது உறுதி. இதற்காக கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கட்சியின் தேசியத் தலைவர்ஜே.பி. நட்டா கூறுகையில், ‘நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அங்கு பாஜக விரைவில் புதிய அத்தியாயம் படைக்கும் என உறுதி அளிக்க விரும்புகிறேன்’ என்றார்.

செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘கரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி யபோது, எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். ஆனால், இன்று 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.இதற்கு செயற்குழு பாராட்டு தெரிவித்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு வட்டார, மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. அங்கு ஜனநாயக நடைமுறையில் பங்கேற்க மக்களிடம் உள்ள ஆர்வம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!