இந்தியா

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை: இரவு ஊரடங்கு குறித்து பரிசீலிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

81views

அதிகரித்து வரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனிடையே, ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேச பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தியாவிலும் வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே அவர்கள் வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும் ஒமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் நுழைந்துவிட்டது. தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் 214 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக டெல்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 54 பேரும், தெலங்கானாவில் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா 19, ராஜஸ்தான் 18, கேரளா 15, குஜராத் 14, ஜம்மு காஷ்மீர் 3, ஒடிசா, உத்தரபிரதேசத்தில் தலா இருவர், ஆந்திரா, சண்டிகர், லடாக், தமிழகம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான கட்டுப்பாடுகள், மருத்துவ வசதிகள், தடுப்பூசி நிலவரம் ஆகியவை குறித்து சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செய்துள்ளது.

இதனிடையே, ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தற்போதைய அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் டெல்டா வகை கரோனா வைரஸைவிட ஒமைக்ரான் வைரஸ் 3 மடங்கு அதிகமாகப் பரவுகிறது. இதுதவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெல்டா வைரஸின் பாதிப்பு இன்னும் உள்ளது. எனவே, கூடுதலான தொலைநோக்குப் பார்வை, தரவுகள் பகுப்பாய்வு, கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தற்போது அவசியமாகிறது.

இதை கருத்தில்கொண்டு அனைத்து அதிகாரிகளும் உடனடியாகவும் மிகுந்த கவனத்துடனும் முடிவுகள் எடுக்க வேண்டும்.

மாவட்ட அளவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, மருத்துவமனை உள்கட்டமைப்பு, மனிதவளம் குறித்த புள்ளி விவரங்களை தொடர்ந்து மறுஆய்வு செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவித்து, விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்படும்.

இரவுநேர ஊரடங்கு, மக்கள் அதிகம் கூடுவதற்கு தடை, திருமணம் மற்றும் இறுதிச்சடங்கில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்தல், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொதுப் போக்குவரத்து போன்றவற்றில் ஆட்களின் எண்ணிக்கையை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்க வேண்டும்.

வீடு வீடாகச் சென்று நோய்த் தொற்று அறிகுறிகள் அதிகம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை உறுதி செய்ய வேண்டும். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறித்து அவர்களுக்கு உரிய நேரத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை மற்றும் ஆம்புலன்ஸ் வசதியை அதிகரிக்க வேண்டும். போதிய அளவு மருந்துகள், ஆக்சிஜன் சாதனங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வோரிடம் கரோனா வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை

ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகள் நடக்காமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள், டெல்லி காவல்துறை கண்காணிக்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் கடைகளுக்கு வரும் மக்களுக்கு வர்த்தக சங்கங்கள் அனுமதி அளிக்கக் கூடாது. கரோனா விதிமுறைகளை போலீஸார் கடுமையாக அமல்படுத்த வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து தொற்று பாதிப்பு விரைவில் பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவிலும் தடை

அதேபோல கர்நாடகாவிலும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெலகாவியில் செய்தியாளர்களிடம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

கர்நாடகாவில் இதுவரை 19 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இறுதியில் ஒமைக்ரான் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பெங்களூருவில் எம்ஜி சாலை, பிரிகேட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் டிச. 30 முதல் ஜனவரி 2 வரை திறந்த வெளியில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்டமாக புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. தேவாலயங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிரார்த்தனை கூட்டங்கள் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!