8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி சார்பில் ஜெரி ஆட்டத்தின் 45 வது நிமிடத்திலும் ஜோனதாஸ் 84 வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மேலும் ஐதராபாத் அணி சார்பில் ஜோயல் ஆட்டத்தின் 51 வது நிமிடத்திலும் விக்டர் 70 வது நிமிடத்திலும் ஆகாஷ் மிஸ்ரா 73 வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதையடுத்து ஐதராபாத் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி தன்னுடைய 6 வது வெற்றியை பெற்றது. மேலும் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.