விளையாட்டு

ஐசிசி யு-19 உலக கோப்பை அரையிறுதியில் இன்று இந்தியா-ஆஸி. பலப்பரீட்சை

39views

ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரையிறுதியில், இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதுகின்றன. வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் இளைஞர் உலக கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளை வீழ்த்திய இந்தியா, காலிறுதியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது.

அந்த போட்டியில் ரவி குமாரின் அபார பந்துவீச்சு மற்றும் தொடக்க வீரர் ரகுவன்ஷியின் உறுதியான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. கேப்டன் யஷ் துல் உள்பட 5 முன்னணி வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பின்னடைவை கொடுத்தாலும், அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடி அணியை வெற்றிப் பாதையில் வழிநடத்தி உள்ளனர். குறிப்பாக, உகாண்டா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 மாற்று வீரர்கள் இடம் பெற்று விளையாடி வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்டிகுவா கூலிட்ஜ் மைதானத்தில் இன்று மாலை 6.30க்கு தொடங்கும் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் சவாலை இந்தியா எதிர்கொள்கிறது. இளைஞர் உலக கோப்பையை ஏற்கனவே 4 முறை முத்தமிட்டுள்ள இந்திய அணி, தொடர்ந்து 4வது முறையாக அரையிறுதியில் விளையாட தகுதி  பெற்றுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் குணமாகி முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகி உள்ளதால், இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது. பயிற்சி ஆட்டத்தில் ஆஸி. யு-19 அணியை பந்தாடியதும் இந்திய வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஹர்னூர், ரகுவன்ஷி, ராஜ் பாவா, யஷ் துல், ரஷீத் ஆகியோர் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கின்றனர். ரவி குமார், ராஜ்வர்தன், பாவா வேகமும், விக்கி, கவுஷல் சுழலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். அதே சமயம், கூப்பர் கானலி தலைமையிலான ஆஸ்திரேலிய யு-19 அணியும் பைனலுக்கு முன்னேற வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!