தமிழகம்

“எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்யா… யாருக்கும் கிடைக்கக் கூடாது” கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

63views
எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்திய பிரியா, யாருக்கும் கிடைக்கக் கூடாது என ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன் என சதீஷ்பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். சென்னை சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது பிளாட்பாரத்தில் நின்று இளம் பெண்ணுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த இளைஞர் , சட்டென்று அந்தப்பெண்ணை பிடித்து ரெயில் முன்பு தள்ளினார். தண்டவாளத்தில் விழுந்த அடுத்த நொடியே அந்தப்பெண்ணின் தலை துண்டானது. அங்கிருந்து இளைஞர் தப்பி ஓடிவிட்டார்.
உடனடியாக ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் அந்த இளம் பெண்ணின் துண்டான உடல் பாகங்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் காவலர் குடும்பத்திற்குள் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் இந்த கொலைச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 47). இவரது மனைவி ராமலட்சுமி (43). மாணிக்கம் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகள் சத்தியப்பிரியா (20). இவர் தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரெயில்நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரெயில் மூலம் தியாகராயநகர் செல்வது வழக்கம். சத்தியப்பிரியா வசித்து வரும் போலீஸ் குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் (23). டிப்ளமோ படித்துள்ளார்.
சத்தியப்பிரியா, சதீஷ் ஆகியோரின் வீடு எதிரெதிரே என்பதாலும், இருவரும் போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம், சத்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் மகளை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வருடமாக சதீஷிடம் சத்யா சரியாக பேசாமல் இருந்துள்ளார். சத்யா மீது கோபத்தில் இருந்த சதீஷ் மூன்று மாதங்களுக்கு முன் அவரது கல்லூரிக்கு சென்று நுழைவாயிலில் வைத்து சத்யாவை அடித்துள்ளார்.
சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சதீஷை விசாரித்த போலீசார், இருவரது பெற்றோரும் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின்னரும் சதீஷ் தெடர்ந்து சத்யாவிடம் பேச முயன்றுள்ளார் அவர் சமாதனம் அடையவில்லை என்று கூறப்படுகின்றது.
இறுதியாக நேற்று பரங்கிமலை ரெயில்நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த தனது தோழிகளுடன் மாணவி சத்யாவிடம் வலியச்சென்று வம்பிழுத்து சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இருவருக்கும் வாக்குவதம் முற்றியதால் சத்யா இனி தனக்கு கிடைக்க மாட்டாள் என்ற நிலைக்கு வந்த சதீஷ், செத்து ஒழி என்று ஆவேசமாக கத்தியபடி… தாம்பரத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த மின்சார ரெயில் முன்பு சத்யாவை ஈவு இரக்கமில்லாமல் பிடித்து தள்ளி கொலை செய்ததாக உடன் இருந்த தோழிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து ரெயில்வே போலீசார் தேடி வந்த நிலையில் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த சதீஷ் நள்ளிரவு 2 மணி அளவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே தியாகராயநகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார்.
தற்போது அவரது உடல் ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் சத்திய பிரியாவை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி வாலிபர் சதீஷ் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:- ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த சத்திய பிரியாவை தான் உயிருக்கு உயிராக காதலித்தேன். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் அவரை எப்படியாவது எனது மனைவியாக்கி விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதனை பல முறை சத்திய பிரியாவிடம் நேரில் சொல்லியுள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாகவே சத்திய பிரியாவை பின் தொடர்ந்து சென்று பேசுவதை வழக்கமாக வைத்திருந்தேன். தொடர்ந்து முயற்சித்தால் சத்திய பிரியா மனம் மாறி விடுவார் என்று எண்ணினேன்.
ஆனால் அவர் எனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை தொடர்ந்து உதாசீனப்படுத்திக் கொண்டே இருந்தார். என்னை காதலிக்க மறுத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மீது சத்திய பிரியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். என்னை எச்சரித்து, சத்திய பிரியாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தனர். நானும் சத்திய பிரியாவை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்தேன்.
இதன் பின்னர் ஒரு கட்டத்தில் இனி சத்திய பிரியாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றே நினைத்தேன். ஆனால் அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. சத்திய பிரியாவை மறக்க முடியாமல் நாளுக்கு நாள் தவித்தேன். எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்திய பிரியா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையடுத்து சத்திய பிரியாவை கொலை செய்து விட திட்டம் போட்டேன். தினமும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து தான் சத்திய பிரியா கல்லூரிக்கு செல்வார். இதனால் அங்கு வைத்து ரெயிலில் தள்ளி விட்டு கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன்.
இதற்காக நேற்று மதியம் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் முன் கூட்டியே சென்று காத்திருந்தேன். பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு சத்திய பிரியா தனது தோழியுடன் வந்ததை பார்த்ததும் அவரது அருகில் சென்று பேசினேன். அப்போது அவர் என்னை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.
இது எனக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. எவ்வளவு நாட்களாக பின் தொடர்ந்து செல்கிறோம். நம் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாரே என்கிற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. நான் ஏற்கனவே முடிவு செய்து வந்தபடி பேசிக்கொண்டிருக்கும் போதே மனதை கல்லாக்கி கொண்டு சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளி விட்டேன்.
இதில் ரெயில் அவர் மீது மோதியதும் அங்கிருந்த பயணிகள் கூட தொடங்கினார்கள். அங்கிருந்தால் நம்மை பிடித்து விடுவார்கள் என பயந்து ரெயில் நிலையத்தில் இருந்து வேகமாக ஓடி விட்டேன். எனக்கு கிடைக்காத சத்திய பிரியா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக்கூடாது என்ற எண்ணத்திலேயே இப்படி செய்து விட்டேன்.
இவ்வாறு கொலையாளி சதீஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சதீசை கைது செய்துள்ள போலீசார் விடிய விடிய அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கொலையாளி சதீஷ் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!