இந்தியா

எங்களின் பொறுமைக்கு சவால் விட வேண்டாம்…மீண்டும் போராட்டம் தொடங்குவோம் – எச்சரிக்கும் விவசாயிகள்

36views

மத்திய அரசுக்கு எதிராக துக்க தினம் அனுசரித்த விவசாயிகள் அமைப்பினர் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்று எச்சரித்துள்ளனர்.

குடியரசு தலைவருக்கு விவசாய அமைப்பு எழுதிய கடிதத்தில், பொறுமைக்கு சவால் விடுவதற்கு எதிராக பாஜக அரசை மோர்ச்சா எச்சரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2020 ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அதனை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் குவிந்தனர். டிராக்டர்களுடன் ஓராண்டுகளுக்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பனியிலும், கடும் மழையிலும் குளிரிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் பலர் உயிரிழந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தை உணர்ந்த மத்திய அரசு கொண்டு கடந்த நவம்பர் மாதம் 3 வேளாண் திருத்த சட்டங்களையும் கடந்த ஆண்டு திரும்ப பெற்றது. அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தது.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டத்தை கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வாபஸ் பெற்றனர். ஆனால் இந்த வாக்குறுதிகளை இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மத்திய அரசை கண்டித்து ஜனவரி 31ஆம் தேதியன்று நாடு முழுவதும் அவர்கள் துரோக தினம் அனுசரித்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த பல்வேறு விவசாய சங்கங்களின் தலைமை அமைப்பு சம்யுக்த் கிசான் மோர்ச்சா. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என இந்த அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) குறித்த குழுவை அமைப்பது, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை.

விவசாயிகளின் பொறுமைக்கு சவால் விடுவதற்கு எதிராக பாஜக அரசை மோர்ச்சா எச்சரிக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், விவசாயிகள் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதை தவிர வேறு வழியில்லை. எஸ்.கே.எம்.க்கு மத்திய அரசு அளித்த 2021 டிசம்பர் 9 தேதியிட்ட கடிதத்தில் அளித்த எந்த உத்தரவாதமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் தலைவர் என்ற முறையில் விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பது குடியரசு தலைவரின் அரசியலமைப்பு கடமை. அவர்களுடன் இந்த மோசடி செய்வதற்கு எதிராக அரசாங்கத்தை எச்சரிக்கவும். விவசாயிகளின் அயராத முயற்சியால், லாக்டவுன் மற்றும் பொருளாதார மந்தநிலை இருந்த போதிலும், நாட்டின் விவசாய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விவசாயிகளுடன் விளையாடுவது முழு நாட்டுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!