உ.பி.யில் இந்த ஆண்டு மிக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கங்கை, யமுனை ஆகிய இரு நதிகளும் பாயும் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வழக்கத்தை விட 12 மடங்கு மழை பெய்துள்ளது. உ.பி. முழுவதிலும் 154 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. வறட்சிப் பகுதியான புந்தேல்கண்டின் ஜலோன், பாந்தா, ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய உ.பி.யின் எட்டவா மாவட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையில் 67 கிராமங்கள் நீரில் மூழ்கி விட்டன. மாநிலம் முழுவதிலும் 24 மாவட்டங்களில் 604 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த இரண்டு தினங்களாக ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார். நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இந்திய ராணுவத்தினரும் ஈடுபடுள்ளனர். இந்திய விமானப் படையினர் ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமானங்கள் மூலமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.