இந்தியா

உ.பி.தேர்தல் 2022: இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.. 55 தொகுதிகளுக்கு 586 பேர் போட்டி

44views

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலம் உ.பி.தான். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த 55 தொகுதிகளில் பாஜக 38 இடங்களிலும் சமாஜ்வாதி 13 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் தலா இரு இடங்களிலும் வென்றது.

இந்த நிலையில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இதனால் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் முதற்கட்டமாக கடந்த 10ஆம் தேதி 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் இந்த 58 தொகுதிகளில் அடங்கும். முதற்கட்ட தேர்தலில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, பாடான், பரேலி, ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 தொகுதிகள் உள்ளன. இதில் தனித்தொகுதிகள் 9.

உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் நிறைவு.. மொத்தம் 60% வாக்குகள் பதிவு!

இந்த 586 வேட்பாளர்களில் 5 பேர் அமைச்சர்கள். இதில் ஷாஜஹான்பூரில் பாஜக சார்பில் தற்போது அமைச்சராக உள்ள சுரேஷ்குமார் கன்னா போட்டியிடுகிறார். அது போல் சந்தாசியில் அமைச்சர் குலாப் தேவி போட்டியிடுகிறார். அது போல் பாடானில் அமைச்சர் மகேஷ் சந்திர குப்தாவும், பஹேரியில் அமைச்சர் சத்ரபால் காங்வாரும் போட்டியிடுகிறார்கள்.

இத்தேர்தலில் மொத்தம் 2,01,42,441 பேர் வாக்காளர்கள். இவர்களில் 1,07,61,476 பேர் ஆண் வாக்காளர்கள். 93,79,704 பேர் பெண் வாக்காளர்கள். 1,261 பேர் மூன்றாம் பாலினத்தவர். பாஜக தலைமையில் ஜாதிய கட்சிகளும் சமாஜ்வாதியுடன், லோக்தளம் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் காண்கிறது. இந்த முறை ஓவைசியின் கட்சியும் போட்டியிடுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!