உ.பி.: சமாஜ்வாதி கட்சி எம்.எல்.சி. புஷ்பராஜ் ஜெயின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் ரெய்டு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.சியும் வாசனை பொருட்கள் வர்த்தகருமான புஷ்பராஜ் ஜெயின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் அண்மையில் ஐ.டி. அதிகாரிகள் நடத்திய ரெய்டு மிகப் பெரும் பேசுபொருளானது. வருமான வரித்துறை, ஜிஎஸ்டி அதிகாரிகள் வாசனை பொருட்கள் வர்த்தகரான பியூஷ் ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பியூஷ் ஜெயின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ257 கோடி ரொக்கப் பணம் சிக்கியது. மேலும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை 120 மணிநேரம் நடத்தப்பட்டது.
பியூஷ் ஜெயினுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் தொடர்பிருப்பதாக உ.பி. தேர்தல் பிரசார களத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குற்றம்சாட்டினர். ஆனால் அகிலேஷ் யாதவ் இதை திட்டவட்டமாக நிராகரித்திருந்தார். எங்கள் கட்சியில் புஷ்பராஜ் ஜெயின்தான் இருக்கிறார்.. ஒருவேளை அவருக்கு பதிலாக பியூஷ் ஜெயின் வீட்டுக்கு தவறுதலாக ஐடி அதிகாரிகள் போயிருக்கலாம் என கூறியிருந்தார்.
இதனை புஷ்பராஜ் ஜெயினும் உறுதிப்படுத்தி இருந்தார். இது தொடர்பாக புஷ்பராஜ் ஜெயின் கூறுகையில், என் வீட்டில் சோதனை நடத்துவதற்கு பதிலாக பியூஷ் ஜெயின் வீட்டில் ரெய்டு நடத்திவிட்டார்கள் போல என கூறியிருந்தார். அத்துடன் பியூஷ் ஜெயின் வீட்டில் ரூ257 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியை காட்டுகிறது எனவும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி ஆகியோர் குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.சி. புஷ்பராஜ் ஜெயின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புஷ்பராஜ் ஜெயின் அண்மையில் சமாஜ்வாதி வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தி இருந்தார். அவரது வீடு, தொழிற்சாலைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.