தமிழகம்

உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு: சேலம், ஈரோட்டில் 100 டிகிரியை கடந்த வெயில்

36views

தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழைக் காலம் முடிந்து குளிர் காலம் தொடங்கியும், அவ்வப்போது பெய்த கனமழை, புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் போன்றவற்றால் குளிரை உணர முடியாமலேயே, இந்த ஆண்டு குளிர் காலமும் முடிவுக்கு வந்துவிட்டது.

தற்போது உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, மதுரை, கரூர் பரமத்தி, சேலத்தில் அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 14, 15-ம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 14-ம் தேதி(இன்று) தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 முதல் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 16, 17-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இதற்கிடையில், நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம், ஈரோட்டில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவான நிலையில், உள் மாவட்டங்களிலும் தற்போது வெயில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!