கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் மருத்துவ வல்லுநர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. அந்த வகையில் வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா வகை கொரோனா நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
அதன்படி உலக சுகாதார அமைப்பு டெல்டா வகை கொரோனா பரவல் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சோந்தவையாக உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, டெல்டா வகை என்று உறுதி செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 75% கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், சில நாடுகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தனது அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.