விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல், போலந்து அணிகள் தகுதி

65views

32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை கத்தாரில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. நேற்று முன்தினம் இரவு போர்டோ நகரில் நடந்த ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றின் பிளே-ஆப் சுற்றில் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கணக்கில் வடக்கு மாசிடோனியாவை வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 8-வது முறையாக தகுதி பெற்றது. போர்ச்சுகல் அணியில் புருனோ பெர்னாண்டஸ் இரு கோல்களையும் அடித்தார். இதன்மூலம் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5-வது முறையாக உலக கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறார். மற்றொரு பிளே-ஆப் சுற்றில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனின் கனவை தகர்த்து உலக கோப்பை அதிர்ஷ்டத்தை தட்டிச் சென்றது.

ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் செனகல் 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை தோற்கடித்தது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது சுற்றில் எகிப்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரு ஆட்டங்களின் முடிவில்1-1 என்று சமநிலை ஏற்பட்டதால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் செனகல் 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி 3-வது முறையாக உலக கோப்பை போட்டிக்குள் கால் பதித்தது. இதே போல் கேமரூன், கானா, மொராக்கோ, துனிசியா அணிகளும் உலக கோப்பை வாய்ப்பை உறுதி செய்தன.

இதுவரை 27 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும் இரு இடங்கள் இன்று தெரிந்து விடும். அதைத் தொடர்ந்து மீதமுள்ள 3 அணிகள் எவை என்பதை அறிய ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கிடையே, உலககோப்பை போட்டியில் குரூப் சுற்றில் யார்-யாருடன் மோதுவது என்பதை முடிவு செய்யும் ‘டிரா’ நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!