உலகம்உலகம்செய்திகள்

உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீா்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

70views

சீனாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீா்மின் உற்பத்தி நிலையத்தின் முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

சீனாவின் தென்மேற்கே பாயும் யாங்ஸே ஆற்றின் துணை நதியான ஜின்ஷா ஆற்றின் குறுக்கே இந்த நீா்மின் நிலையத்துக்கான பய்ஹேட்டன் அணையை சீனா கட்டியுள்ளது. சுமாா் 954 அடி உயரம் கொண்ட இந்த அணையில், தலா 10 லட்சம் கிலோ வாட்ஸ் மின் உற்பத்தித் திறன் கொண்ட 16 அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, யாங்ஸே ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட 2.25 கோடி கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ‘த்ரி கோா்ஜஸ்’ அணையை சீனா கடந்த 2003-ஆம் ஆண்டு திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது.

இப்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட நூற்றாண்டு நிறைவு வார விழாவின் ஒரு பகுதியாக, இரண்டாவது அணையில் மிகப் பெரிய நீா்மின் உற்பத்தி திட்டத்தை சீனா செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

அணைகளை அதிக அளவில் கட்டுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவது, மீன்கள் உள்ளிட்ட நீா்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆற்றின் சூழல் பாதிப்பு, சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் எதிா்ப்பு உள்ளிட்ட காரணங்களால் நீா் மின் உற்பத்திக்கு உலகம் முழுவதும் ஆதரவு குறைந்து வருகிறது.

ஆனால், இதுபோன்ற எதிா்ப்புகளையெல்லாம் மீறி, அதிக எண்ணிக்கையில் அணைகளை சீனா கட்டி வருகிறது.

மேலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இதுபோன்று நீா்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் உயா் அழுத்த மின்சாரத்தை, ஷாங்காய் மற்றும் நாட்டின் பிற கிழக்குப் பகுதி நகரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான மிக உயா் அழுத்த (யுஹெச்வி) மின் கடத்தி தொழில்நுட்பத்திலும் முன்னணி நாடாக சீன விளங்குகிறது.

‘பய்ஹேட்டன் நீா்மின்உற்பத்தி நிலையத்தின் 16 அலகுகளும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, மின் உற்பத்திக்காக ஆண்டுக்கு 2 கோடி டன் நிலக்கரியை எரிக்க வேண்டிய அவசியம் தவிா்க்கப்பட்டுவிடும்’ என்று இந்த அணையை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்ததாக சீன அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!