உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென் அமெரிக்க பிரிவு தகுதிச்சுற்றில் ஆர்ஜென்டீனா 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவுக்காக “ஹாட்ரிக்’ கோல்கள் அடித்தார் லயோனல் மெஸ்ஸி. இதன் மூலம் தென் அமெரிக்க கால்பந்து வரலாற்றில் சர்வதேச ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் எட்டினார். முன்னதாக பிரேஸில் வீரர் பீலே 77 கோல்கள் அடித்து சாதனையாக இருந்தது. தற்போது மெஸ்ஸி 79 கோல்கள் அடித்து அதை முறியடித்துள்ளார்.
பீலே 92 ஆட்டங்களில் அத்தனை கோல்கள் அடித்திருந்த நிலையில், மெஸ்ஸி 153 ஆட்டங்களில் தனது கோல்களை அடித்துள்ளார். இருவருமே தங்களது அந்த சாதனை கோலை பியூனஸ் அயர்ஸ் மைதானத்தில் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொலிவியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி 14, 64, 88 ஆகிய நிமிஷங்களில் கோலடித்தார்.
பிரேஸில் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் பிரேஸில் 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை வென்றது. இந்த ஆட்டத்தில் பிரேஸில் தரப்பில் எவர்டன் ரிபெய்ரோ 14-ஆவது நிமிஷத்திலும், நெய்மர் 40-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனர்.
சிலிக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. கொலம்பியா அணியில் மிகேல் போர்ஜா (19 மற்றும் 20-ஆவது நிமிஷங்கள்), லூயிஸ் டியாஸ் (74-ஆவது நிமிஷம்) ஆகியோர் கோலடித்தனர். சிலிக்காக ஜீன் மெனசஸ் 56-ஆவது நிமிஷத்தில் கோலடித்தார்.
பராகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வெனிசூலாவை வீழ்த்தியது. பராகுவே தரப்பில் டேவிட் மார்டினெஸ் (7-ஆவது நிமிஷம்), அலெக்ஸாண்ட்ரோ ரொமேரோ (46 -ஆவது நிமிஷம்) ஆகியோர் ஸ்கோர் செய்ய, வெனிசூலா அணியில் ஜான் சேன்சலர் (90-ஆவது நிமிஷம்) கோலடித்தார்.
ஈகுவடாரை 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணிக்காக காஸ்டன் பெரெய்ரோ கடைசி நிமிஷத்தில் (90+2) கோலடித்தார்.