உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் ஐரோப்பிய பிரிவில் போா்ச்சுகல் 5-0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பா்க்கை வீழ்த்தியது.
இத்துடன் 6 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள போா்ச்சுகல், குரூப் ‘ஏ’-வில் 16 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. லக்ஸம்பா்க் அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் 2 வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.
போா்ச்சுகலின் அல்மான்சில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 8, 13, 87 ஆகிய நிமிஷங்களில் கோலடித்தாா். இதில் முதலிரு கோல்கள் பெனால்டி கிக் வாய்ப்பில் அடிக்கப்பட்டன. அவா் தவிர புருனோ ஃபொனாண்டஸ் 17-ஆவது நிமிஷத்திலும், ஜாவ் பாலின்ஹா 69-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா்.
டென்மாா்க் தகுதி: ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற டென்மாா்க், 2-ஆவது அணியாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றது. டென்மாா்க் அணி தான் விளையாடிய 8 ஆட்டங்களிலுமே வெற்றியை பதிவு செய்து 24 புள்ளிகளுடன் குரூப் ‘எஃப்’-இல் முதலிடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து – ஹங்கேரி டிரா: இங்கிலாந்தின் வெம்ப்ளி மைதானத்தில் அந்நாட்டு அணியை எதிா்கொண்ட ஹங்கேரி, 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தது. இந்த ஆட்டம் தொடங்கியபோது ஹங்கேரி ரசிகா்களுக்கும் – காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரசிகா் ஒருவா் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளவரை இனவெறி ரீதியாக விமா்சித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
முன்னதாக இந்த இரு அணிகளும் மோதிய முதல் லீக் ஆட்டம் புடாபெஸ்டில் கடந்த மாதம் நடைபெற்றபோதும் இதே இனவெறி விமா்சன குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து ஹங்கேரிக்கு தண்டனையாக, ஒரு ஆட்டத்தை அந்த அணி ரசிகா்கள் இல்லாமல் விளையாடியது நினைவுகூரத்தக்கது.
ஆட்டம் நிறுத்தம்: அதேபோல், அல்பேனிய தலைநகா் டிரானாவில் அந்நாட்டு அணிக்கும் போலந்துக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. முன்னதாக ஆட்டத்தின் 77-ஆவது நிமிஷத்தில் போலந்து கோலடித்து முன்னிலை பெற்றபோது அந்த அணி வீரா்கள் மீது அல்பேனிய ரசிகா்கள் தண்ணீா் பாட்டில்களை வீசியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. போலந்து வீரா்கள் களத்திலிருந்து வெளியேற, அல்பேனிய ரசிகா்கள் எச்சரிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடா்ந்தது.
இதர ஆட்டங்களில் ஃபின்லாந்து – கஜகஸ்தானையும் (2-0), ஜாா்ஜியா – கொசொவோவையும் (2-1), ஸ்விட்சா்லாந்து – லிதுவேனியாவையும் (4-0), ஸ்வீடன் – கிரீஸையும் (2-0) வென்றன. அஜா்பைஜான் – சொபியாவிடமும் (1-3), ஃபாரோ தீவுகள் – ஸ்காட்லாந்திடமும் (0-1), மால்டோவா – இஸ்ரேலிடமும் (1-2), வடக்கு அயா்லாந்து – பல்கேரியாவிடமும் (1-2), சான் மரினோ – அண்டோராவிடமும் (0-3) தோற்றன. உக்ரைன் – போஸ்னியா ஆட்டம் டிரா (1-1) ஆனது.
ஆசிய பிரிவு: ஓமன் 3-1 என வியத்நாமையும், லெபனான் 3-2 என சிரியாவையும், சவூதி அரேபியா 3-2 என சீனாவையும் வீழ்த்த, ஐக்கிய அரபு அமீரகம் – இராக் மோதிய ஆட்டம் 2-2 என டிரா ஆனது.
ஆப்பிரிக்க பிரிவு: தென் ஆப்பிரிக்கா – எத்தியோபியாவையும் (1-0), அல்ஜீரியா – நைஜரையும் (4-0), டோகோ – காங்கோவையும் (2-1), மொராக்கோ – கினியாவையும் (4-1) வீழ்த்தின.