இந்தியா

உத்தர பிரதேசத்தின் 58,000 கிராமங்களில் விவசாயிகளிடம் சாதனை விளக்க கூட்டங்கள்: அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு பாஜக தலைமை உத்தரவு

58views

உத்தர பிரதேசத்தின் 58,000 கிராமங் களை சேர்ந்த விவசாயிகளிடம் அரசின் சாதனைகளை விளக் கும் கூட்டங்களை பாஜக தொடங் கியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான இந்தக் கூட்டங்களில், விவசாயிகள் போராட்டத்தை முறியடிக்க விழிப்புணர்வையும் பாஜக ஏற்படுத்த உள்ளது. உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரக் கூட்டங்களை பாஜக தொடங்கி விட்டது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டமும், லக்கிம்பூர் கெரி சம்பவமும் பாஜகவின் வெற்றிக்கு தடையாகி இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதை முறியடிக்க உ.பி.யில் மொத்தம் உள்ள 58,195 கிராமங்களிலும் ‘கிசான் சவுபல்ஸ்’ என்ற பெயரில் விவசாயிகளிடம் அரசின் சாதனைகளை விளக் கும் கூட்டத்தை பாஜக தொடங்கி யுள்ளது.

இதில் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என பாஜக கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் பலனை எடுத்துரைத்து டெல்லி விவசாயப் போராட்டங்களின் தாக்கத்தை முறியடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. நேற்று விஜயதசமி முதல் தொடங்கியுள்ள இந்தக் கூட்டங்கள் வரும் அக்டோபர் 31 வரை நடைபெற உள்ளன. அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி. பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறும்போது, ‘விவசாயக் கடன் ரத்து, கரும்பு கொள்முதல் விலை உயர்வு, விவசாயக் கருவிகள், உரம் மற்றும் விதைகளுக்கான மானியம் என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் இந்த நலத்திட்டங்கள், பாஜக நடத்தும் கூட்டங்களில் மக்களிடம் சேரும் வகையில் எடுத்துரைக்கப்படும். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் மீது விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

டெல்லி எல்லை பகுதியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம், மேற்கு உ.பி.யில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை நன்கு உணர்ந்த பாஜக, அது தேர்தலில் வெற்றியை பாதிக்காதபடி திட்டமிட்டு வருகிறது. இதற்கான பொறுப்பு அப்பகுதியின் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!