திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ-வாக உள்ள உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியைவிட 69 ஆயிரத்து 355 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் முழுமையாக தெரிவிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும், என கோரப்பட்டது. ஆனால், வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக் கூடாது.
தள்ளுபடி செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.