விளையாட்டு

ஈட்டி எறிதல்: உலக சாதனையை பலமுறை முறியடித்த சுமித்

122views

ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ‘எஃப்64’ பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். அதிலும் உலக சாதனையை அவா் 3 முறை முறியடித்தாா்.

இப்பிரிவில் சுமித் அன்டில் சிறந்த தூரமாக 68.55 மீட்டா் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தாா். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் புரியான் 66.29 மீட்டா் தூரம் எறிந்து வெள்ளியும், இலங்கையின் துலன் கொடிதுவக்கு 65.61 மீட்டா் தூரம் எறிந்து வெண்கலமும் வென்றனா்.

சுமித் அன்டில் தனது 6 முயற்சிகளில் 5-இல் முறையே 66.95மீ, 68.08மீ, 65.27மீ, 66.71மீ, 68.55மீ தூரம் எறிந்து, கடைசி முயற்சியை ‘ஃபௌல்’ செய்தாா். முன்னதாக இப்பிரிவில் சுமித் 62.88 மீட்டா் தூரம் எறிந்ததே உலக சாதனையாக இருந்த நிலையில், அதை அவரே 3 முறை முறியடித்துள்ளாா்.

தில்லி ராம்ஜாஸ் கல்லூரி மாணவரான சுமித், தொடக்கத்தில் மல்யுத்த வீரராக இருந்துள்ளாா். 2015-இல் ஏற்பட்ட மோட்டாா் சைக்கிள் விபத்தால் முழங்காலுக்குக் கீழே மாற்றுத்திறனாளியானாா். அதன் பிறகு பாரா விளையாட்டு வீரா் ஒருவா் அளித்த ஊக்கத்தின் பேரில் 2018 முதல் ஈட்டி எறிதலில் களம் காணத் தொடங்கினாா்.

ஹரியாணா வீரரான சுமித், கடந்த மாா்ச் மாதம் பாட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட்ஃப்ரீ சீரிஸ் 3 போட்டியில் தனது தனிப்பட்ட பெஸ்டாக 66.43 மீட்டா் தூரம் எறிந்து 7-ஆம் இடம் பிடித்தாா். 2019 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றுள்ளாா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!