உலகம்

இலங்கை பெட்ரோல் நிலையங்களில் ராணுவம் நிறுத்தப்பட்டது

102views

அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. குறிப்பாக அன்னியச்செலாவணி பற்றாக்குறையால் அங்கு இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை, விஷம் போல ஏறி உள்ளது. பெட்ரோல், டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே, கொளுத்தும் வெயிலிலும் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். பல மணி நேரம் மின்வெட்டையும் பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.

எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்ற 4 பேர் அங்கு பலியாகி உள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று, வரிசையில் நின்ற முதியவர்கள் 3 பேர் களைப்பால் உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வரிசையில் நின்றபோது ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இது அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, பெட்ரோல் டீசல் வினியோகத்தை கண்காணிக்க இலங்கை அரசு ராணுவத்தை களம் இறக்கி உள்ளது.

ஆயுதங்கள் இல்லாத படை வீரர்கள், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் நிலையங்களில் நேற்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி அந்த நாட்டின் எரிசக்தி மந்திரி காமினி லோகுகே, கொழும்பு நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் வியாபார நோக்கத்துக்காக எரிபொருளை எடுத்துச்செல்கிற தேவையற்ற சூழலை சமாளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே பெட்ரோல் நிலையங்களில் ராணுவ வீரர்களை நிறுத்த முடிவு செய்தோம்.

அவர்கள் மக்கள் மத்தியில் எரிபொருளை நியாயமான முறையில் வினியோகிப்பதை உறுதி செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!