இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்.
வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அவர் அந்த பொறுப்பை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பொறுப்பை அடுத்த ஒரு ஆண்டுக்கு ஜெயவர்தனே கவனிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இலங்கை அணியின் அனைத்து விதமான செயல்பாட்டையும் அவர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜெயவர்தனே தேசிய அணியில் ஏற்றுக் கொண்டுள்ள புதிய பொறுப்புக்காக நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அவரது பங்களிப்புடன் அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது. எதிர்வரும் 2022-இல் இலங்கை அணி, அதிகளவில் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. அதற்கு ஜெயவர்த்தனே அணியின் பக்கம் இருப்பது உறுதுணையாக இருக்கும்’ என இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் சி.இ.ஓ ஆஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனை சிறந்ததொரு நல்வாய்ப்பாக பார்ப்பதாக ஜெயவர்தனே தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்காக 149 டெஸ்ட், 448 ஒருநாள் மற்றும் 55 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.