தமிழகம்

இபிஎஸ் கார் தாக்கப்பட்ட விவகாரம்; வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என டிடிவி தினகரன் விளக்கம்

108views

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் காரை வழிமறித்து அமமுகவினர் கோஷமிட்ட நிலையில், அமமுக ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அதிமுகவினர், அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.

இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் ‘அம்மா உணவகம், அம்மா மருந்தகம் திட்டங்களை நிறுத்துவோரின் கொட்டங்கள் அடக்கப்படும், ‘நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து என்று பொய் வாக்குறுதியளித்த முதலமைச்சர், இனியும் தமிழர்களை ஏமாற்ற விடமாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்தனர்.

அஞ்சலி செலுத்திய பிறகு, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அவர்களது காரில் புறப்பட்டு செல்லும் போது காமராஜர் சாலை அண்ணா சதுக்கம் காவல் நிலையம் சந்திப்பு அருகே இபிஎஸ் மற்றும் கே.பி.முனுசாமி ஆகிய இருவரின் வாகனத்தையும் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் வழிமறித்து இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதைப்பார்த்த அதிமுக தொண்டர்கள் உடனே அங்கு வந்து அமமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரது காரையும் வழிமறித்து ‘டிடிவி.தினகரன் வாழ்க.. சசிகலா வாழ்க’ என்று முழக்கமிட்டனர்.

திடீரென எடப்பாடி பழனிசாமி கார் மீது அமமுகவினர் செருப்பு வீசினர். ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் மீது அமமுகவினர் செருப்பு மற்றும் கற்களை வீசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரில் தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு, தடி, கம்பு, கட்டை, போன்ற ஆயுதங்களை அமமுகவினர் எடுத்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு அமமுகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன்.

பழனிசாமி & கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் புத்தி எங்களுக்கு கிடையாது.

அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!