தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக கரோனா பாதிப்பு அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம் தமிழகத்தின் பல பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முன்பை விட தற்பொழுது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதோடு நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.
இந்நிலையில் பூனேவில் இருந்து மேலும் மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வர உள்ளன. மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.