உத்தரபிரதேசத்தில் இன்று 4ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
இதன் காரணமாக, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நான்காவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 624 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். சர்ச்சைக்குரிய உன்னாவ் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 27ஆம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தலும், மார்ச் 3ஆம் தேதி ஆறாம் கட்டத் தேர்தலும், மார்ச் 7ஆம் தேதி ஏழாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளன.
மேலும், பிப்ரவரி 20ம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் 65க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகள் கைப்பற்றப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கர்ஹால் தொகுதியில் உள்ள ஜஸ்வந்த்பூர் வாக்குச்சாவடியில் ஒருவர் கள்ள ஓட்டுப்போடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை உறுதிப்படுத்திய தேர்தல் ஆணையம் கர்ஹால் தொகுதியில் உள்ள ஜஸ்வந்த்பூரில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவித்தது.