இந்த விலங்கின் உறுப்பு மனிதனுக்கு பொருந்துமா..? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்.. மைல்கல்லை எட்டிய மருத்துவர்கள்..!!
பன்றியின் சிறுநீரகத்தை மூளை சாவு அடைந்த நபருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளனர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மனிதர்களிடையே தற்போது மிகவும் சாதாரணமாகி விட்டது. ஆரம்பகட்டத்தில் மனிதனுக்கு மிகவும் நெருங்கிய இனமான குரங்குகளிடம் இருந்து உறுப்புகளை மாற்றம் செய்வதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அமெரிக்க மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளனர்.
அது யாதெனில், அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரில் என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த ஒரு நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு திடீரென சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. இதனால் மருத்துவ விஞ்ஞானிகள் அவருடைய குடும்பத்தின் அனுமதியைப் பெற்று பன்றியினுடைய சிறுநீரகத்தை மூளை சாவு அடைந்த நபருக்கு பொருத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பன்றியின் சிறுநீரகமானது அவரின் உடலுக்கு வெளியே வைக்கப்பட்டு அவரின் ரத்தக்குழாய்களுடன் இணைக்கப்பட்டு மூன்று நாட்கள் வரை பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு உள்ளது.
இந்த சிறுநீரகமானது மூளைச்சாவடைந்த நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நிராகரிக்கபடாமல் சீராக இயங்கியுள்ளது. மேலும் இந்தச் சோதனையின் முடிவில் சிறுநீரகமானது மிகவும் சாதாரணமாக இருக்கிறது என ஆய்வுக்கு தலைமை தாங்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ராபர்ட் கூறியுள்ளார். மேலும் மூளைச்சாவடைந்த நபருக்கும் முன்னர் இருந்த சிறுநீரகம் மிகவும் மோசமடைந்துள்ளது. அதோடு கெரோட்டினின் அளவு மிகவும் அசாதாரணமாக இருந்துள்ளது.
ஆனால் தற்போது கெரோட்டினின் அளவு வழக்கமான நிலைக்கு வந்து விட்டதாகவும் மருத்துவர் ராபர்ட் கூறியுள்ளார். இந்த சோதனையில் கிடைத்த வெற்றியானது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மைல் கல்லாக அமைந்திருக்கிறது. மேலும் லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில் உறுப்புகளின் பற்றாக் குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது. அதோடு இனங்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்துள்ளதாகவும் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.