இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம், வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அதை மறைக்கும். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நிகழ உள்ளது.
வரும் 18ஆம் தேதி இரவு தொடங்கி 19ஆம் தேதி வரையில் இது ஏற்பட உள்ளது. இந்திய நேரப்படி பகல் 1.30க்கு இந்த கிரகணத்தின் உச்சம் ஏற்பட உள்ளது. அப்போது, சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைக்கும். இதனால், சந்திரன் சிகப்பு நிறத்தில் காணப்படும்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இந்த கிரகணம் 3 மணி நேரம், 28 நிமிடங்கள் நீடிக்கும் என்று கணித்துள்ளது. ‘2001ஆம் ஆண்டு முதல் 2100ஆம் ஆண்டு வரையிலான நூற்றாண்டில், இதை விட வேறு எந்த சந்திர கிரகணமும் இவ்வளவு நீண்ட நேரத்துக்கு இருக்காது என தெரியவந்துள்ளது.
உலகின் பெரும்பாலான பகுதிகளில், நேர மண்டலத்துக்கு ஏற்றபடி பல்வேறு நேரங்களில் இந்த கிரகணத்தை காண முடியும். குறிப்பாக, வட அமெரிக்க நாடுகளில் இதை தெளிவாக காணலாம். அதோடு, தென் அமெரிக்க நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள், பசிபிக் பிராந்தியம், ஆஸ்திரேலிய நாடுகளிலும் காணலாம்,’ என நாசா தெரிவித்துள்ளது.
19ஆம் தேதி நடக்கும் நீண்ட நேர சந்திர கிரகணத்தை காண முடியாத பகுதிகளை சேர்ந்தவர்கள், நாசாவின் நேரடி ஒளிபரப்பில் இதை காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.