நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவர் மலேஷிய குடியுரிமை பெற்றவர். இவர் 2009-ல் சிங்கப்பூருக்கு ‘ஹெராயின்’ என்ற போதை பொருளை 42 கிராம் அளவில் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் மரண தண்டனையை வரும் 10-ம் தேதி நிறைவேற்றப் போவதாக தெரிவித்துள்ளது. ‘போதை பொருள் கடத்தலின் போது நாகேந்திரன் மனநிலை சரியில்லாமல் இருந்ததால் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது’ என, மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன.
மலேஷிய நாடாளுமன்றம் முன் ஏராளமான வழக்கறிஞர்கள் கூடி ‘மரண தண்டனையை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, முழக்கமிட்டனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “நாகேந்திரன் போதை பொருள் கடத்தலின் போது மனநிலை பாதித்திருந்ததாக கூறுவது தவறு.
அவர், நன்கு தெரிந்தே திட்டமிட்டு போதை பொருள் கடத்தி வந்துள்ளார். இதை, நான்கு மனநல மருத்துவர்கள், நாகேந்திரன் தொடர்பான ஆய்வறிக்கையில் உறுதி செய்துள்ளனர். எனவே சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்றப்படும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கிரிமினல் குற்றவாளிகள் போல நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை கண்டித்து பிரிட்டனின் ‘சேஞ்ச் டாட் காம்’ வலைதளத்தில் ஏராளமானோர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை சிங்கப்பூர் அரசுக்கு அனுப்பியுள்ளனர்.