இந்தியாசெய்திகள்

இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றிய கார்கில் வெற்றித்திருநாள் இன்று!

66views

இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்னை என்பது சுதந்திரம் பெற்றது முதலே இருந்து வருகிறது. இந்திய ராணுவம் என்ற ஒரு பெரும்படை இல்லை என்றால் காஷ்மீரை எப்போதோ பாகிஸ்தான் கைப்பற்றியிருக்கும். அப்படிப்பட்ட இந்திய ராணுவத்தின் பலத்தை உலகறியச் செய்த நாள் தான் கார்கில் வெற்றி தினமான ஜூலை 26. பாகிஸ்தான் படைகளை சிதறடித்து இந்திய ராணுவத்தினர் கார்கில் பகுதியை மீட்ட வெற்றித்திருநாள் இந்த நாள்… இந்த கார்கில் போர் பற்றிய சிறுதொகுப்பை காணலாம்….

இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ளது கார்கில் நகரம். திரும்பும் திசையெல்லாம் உயர்ந்து நிற்கும் மலைச் சிகரங்கள். அதன்மேல் காணப்படும் பனிப் படலங்கள்.. என இந்நகரின் அழகைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

கார்கில், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்ரீநகர்-லே நகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கார்கில் பகுதியை அடையலாம். போரில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக இப்பகுதியில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 24,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விழா கொண்டாடப்படுகிறது.

1999ல் மே மாதம் தொடங்கியது கார்கில் போர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இருபகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இந்த பகுதியில் -48 டிகிரி வெப்பநிலை இருப்பதால், குளிர்காலத்தில் இரு நாட்டு ராணுவப் படைகளும் தங்கள் பாசறைகளை சென்று விட வேண்டும். அந்த காலத்தில் தாக்குதல் எதுவும் நடத்தக்கூடாது. இது தொடர்பாக 1972ம் ஆண்டு ‘சிம்லா ஒப்பந்தம்’ போடப்பட்டது. அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ராணுவ வீரர்கள் எல்லைப்பகுதியில் இருப்பதில்லை.

ஆனால், காஷ்மீரை கைப்பற்றும் நோக்கில், 1999ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் பாசறைக்குத் திரும்பாமல் குளிர் காலத்தில் அங்கேயே தங்கியுள்ளனர். ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால், இந்திய ராணுவத்தைத் தாக்கி எளிதாக காஷ்மீரை கைப்பற்றலாம் என பாகிஸ்தான் எண்ணியது. அதன்படியே, முஷ்கோ பள்ளத்தாக்கில் முகாமிட்டு இருந்த பாகிஸ்தான் படைகளுடன் அப்போதைய ராணுவத் தளபதி பர்வேஸ் முஷராப் ஆலோசனை மேற்கொண்டார். அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்-க்கு தெரியாமல் இந்த சதியை முஷாரப் செய்துள்ளார்.

சத்தமில்லாமல் ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தது பாகிஸ்தான். இந்தியப்படைகள் இல்லாத நேரத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, கார்கில் பகுதியில் ஊடுருவி, அங்கு இந்தியப்படைகள் நுழையாதவாறு அப்பகுதியை சூழ்ந்து கொண்டனர். இந்திய வீரர்கள் தங்கியிருந்த இடங்களை அளித்ததோடு, அவர்களது கட்டுப்பாட்டில் புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்தனர்.

பின்னர் இந்திய ராணுவத்திற்கு தகவல் சென்றது. அப்பகுதிக்குச் சென்ற இந்திய ராணுவத்தினர் சிலரை பாகிஸ்தான் படையினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர். கார்கில் போர் மூண்டது. கார்கில் பகுதியை கைப்பற்றும் முனைப்பில் லட்சக்கணக்கான வீரர்களை திரட்டிக்கொண்டு இந்திய படை போரை எதிர்கொள்ள புறப்பட்டது. சுமார் 2 லட்சம் வீரர்கள் இந்த போரில் பங்கெடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேரடியாக வந்து போரிடாமல் இந்திய வீரர்கள் இல்லாத நேரத்தில் வந்து இடத்தை கைப்பற்றி பின்முதுகில் குத்திய பாகிஸ்தான் படையை இந்திய வீரர்கள் அடித்துவிரட்டினர் என்றே கூறலாம்.

முதலில் இரு தரப்பும் சமமான அளவிலே போரிட்டது. பாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு பகுதியும் கடுமையான போராட்டங்களுக்கு பின் மீட்கப்பட்டது. ஆக்கிரமித்த பகுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக இழந்து இறுதியில் மண்ணை கவ்விய பாகிஸ்தான், உலக நாடுகளின் எச்சரிக்கையாலும், வலிமையான இந்திய படைக்கு பதிலடி கொடுக்க முடியாமலும் தன் படைகளை பின் வாங்குவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பை அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்டார். தோராயமாக 3000 பாகிஸ்தான் வீரர்கள் இதில் கொல்லப்பட்டனர்.

இந்திய ராணுவம் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த போரின் வெற்றிக்காக இந்திய வீரர்கள் 527 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர். அவர்களின் நினைவிடம் காஷ்மீர் கார்கில் நகரத்தின் ட்ராஸ் என்ற பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இங்கு விழா கொண்டாடப்படுகிறது.

இந்த கார்கில் வெற்றி நாள்… பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இந்திய ராணுவப்படையின் வலிமையை பறைசாற்றிய நாள். இந்நாளில் நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை நினைவு கூர்வோம்…ஜெய்ஹிந்த்!!!

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!