இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அபுதாபிக்கு வந்தவுடன் அவர்கள் கட்டாயமாக 12 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று எதிகாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய எதிகாத் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளியிட்டுள்ள தனிமைப்படுத்துதலுக்கான விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்து உள்ளதாகவும், அதன்படி பசுமை நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற வில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பசுமை நாடுகளின் பட்டியலில் இடம் பெறாத இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகள், அபுதாபி விமான நிலையத்திற்கு வந்ததும் கட்டாயமாக அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து அபுதாபி வருபவர்கள், கட்டாயம் அமீரகத்தில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி, குறைந்தது 14 நாட்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், விமான நிலையத்தில் அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கைப்பட்டைகள் அணிவிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் 12 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த 12 நாட்களில் அவர்கள், 6வது நாளில் ஒரு பி.சி.ஆர். பரிசோதனையையும், 11வது நாளில் மற்றுமொரு பி.சி.ஆர். பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என்று தெரிவித்துள்ளது.