இந்தியா

இடைத்தேர்தல்களில் தோல்வி… 5 மாநில சட்டசபை தேர்தல்கள்- டெல்லியில் இன்று கூடுகிறது பாஜக செயற்குழு

72views

சட்டசபை இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) படுதோல்வி அடைந்த நிலையில் இன்று டெல்லியில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநில சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் பட்டாளம் களமிறக்கப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் பல்வேறு நலத் திட்ட பணிகளையும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்து வருகின்றனர்.

உ.பி, உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. இம்மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கும் வகையில் பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற 14 மாநில இடைத்தேர்தல்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த தோல்வியைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்களுக்கான வியூகங்கள் குறித்து இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பெரும்பாலானோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்க உள்ளனர். அதேநேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை நேரில் பங்கேற்கவும் பாஜக மேலிடம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இன்று ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

அதேபோல் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக எம்.எல்.ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸுக்கு கட்சி தாவி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இன்றைய பாஜக தேசிய செயற்குழு விவாதிக்க உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மிக மோசமான பின்னடைவை பாஜக எதிர்கொண்டு வருவதால் அம்மாநில அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!