இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா, இங்கிலாந்தில் தற்போது பரவிவருகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து அங்கு பரவிவரும் டெல்டா வகை கொரோனாதான், அங்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு 50 சதவிகிதம் காரணமென அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இதுபற்றி பேசியிருக்கும் அமெரிக்காவின் ஸ்டீவென் ரிலே என்ற தொற்றுநோயியல் மருத்துவத்துறையின் பேராசிரியர், ‘இங்கு கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 11 நாள் இடைவெளிக்கும் ஒருமுறை, இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது’ எனக்கூறியுள்ளார்.
லண்டனிலுள்ள பொது சுகாரத்துக்கான இம்பீரியல் கல்லூரி சார்பில், கொரோனா பரவல் குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்து. மே 20 முதல் ஜூன் 7 ம் தேதி வரை சேகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட இந்த ஆய்வில், 670 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஊரடங்கு முயற்சியால், படிப்படியாக இங்கிலாந்தில் குறைந்து வந்த கொரோனா, மீண்டும் வேகமெடுத்து, 3 மாதங்களில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாகவும், அதில் மே மாதத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட கொரோனா பரவலுக்கு, டெல்டா வைரஸ் கொரோனாவுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் ஆய்வில் உறுதியாக தெரியவந்துள்ளது.
பாதிப்பை தொடர்ந்து, மேலும் 4 வாரங்களுக்கு அங்கு ஊரடங்கை நீட்டிக்க, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.