செய்திகள்தமிழகம்

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

92views

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வந்த நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 21ம் தேதி சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கலைவாணர் அரங்கத்தில் ((இன்று)) காலை 10 மணிக்கு, 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.

புதிய அரசு பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில் சில ஆளுநர் உரையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. கொரோனா தொற்றை குறைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாராட்டு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை ஆளுநர் உரையில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான தகவலும் ஆளுநர் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் விறுப்பு வெறுப்பின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அரசியல் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் உரையுடன் முதல் நாள் கூட்டம் நிறைவடையும். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.

முன்னதாக, பேரவைக்குள் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் என முடிவுகள் வந்தவர்கள் மட்டும் பேரவையில் அனுமதிக்கப்படுவார்கள். சட்டப்பேரவை கூடுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் திமுக தலைமையிலான ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில், ஆளுநரின் உரை இருக்கும் என்பதால், ஆளுநர் உரை மீதான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!