கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்ட கார்டிலியா சொகுசுக் கப்பலில் கேளிக்கை விருந்து நடைபெற்றது. இதில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களை 3 நாள் என்சிபி காவலில் விசாரிக்க நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை அனுமதி வழங்கியது. என்சிபி காவல் முடிவுக்கு வந்ததால் இவர்கள் நேற்றுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் வரும் திங்கட்கிழமை (அக். 11) வரை தங்கள் காவலில் விசாரிக்க என்சிபி அனுமதி கோரியது. இதற்கு ஆர்யன்கான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘என்சிபிஏற்கெனவே போதிய கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளது. ஆர்யனை இனிமேலும் என்சிபி காவலில் வைக்க அவசியமில்லை என கருதுகிறேன். என்றாலும் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்’ என்றார்.
இதையடுத்து ஆர்யன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வெள்ளிக்கிழமை (இன்று) விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.