ஆப்கானிஸ்தானில் உள்ள மாகாணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தலிபான்கள் வசம் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்நாட்டில் துப்பாக்கி முனையில் அமைக்கப்படும் அரசை அங்கீகரிக்கப் போவதில்லை என இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிவரும் நிலையில் அங்கு ஆட்சியைக் கைப்பற்ற தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அரசுப் படைகளுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வரும் தலிபான் படைகள், ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 15-க்கும் மேற்பட்டவற்றை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. ஆப்கனின் இரண்டாவது பெரிய நகரமான காந்தஹார், மூன்றாவது பெரிய நகரமான ஹெராத் ஆகியவையும் தலிபான்கள் வசம் வந்துவிட்டன.
தலைநகர் காபுல் உள்ளிட்ட மேலும் பல மாகாணங்களையும் தங்களது ஆளுமையின் கீழ் கொண்டுவர தலிபான் படைகள் வேகமாக முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தலிபான்கள் வசம் வந்திருக்கும் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி பிற இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா, இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தேவையான முயற்சிகளை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் துப்பாக்கி முனையில் ராணுவ நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானில் அரசு ஒன்று அமைந்தால் அதை அங்கீகரிக்க கூடாது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் படைகள் இதே வேகத்தில் முன்னேறினால் ஓரிரு மாதங்களில் அப்படைகள் அந்நாட்டை முழுமையும் வசப்படுத்தி விடும் என அமெரிக்க ராணுவத்தின் உளவுத் துறை கணித்துள்ளது.
இதனிடையே, தலைநகர் காபுலில் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிவோரை பத்திரமாக அழைத்துவர ஆப்கானிஸ்தானுக்கு 3 ஆயிரம் படையினரை அமெரிக்க அனுப்புகிறது. இதேபோல் பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு தூதரகப் பணியாளர்களை அழைத்துவர அந்நாடுகளும் சிறப்புப் படைகளை ஆப்கனுக்கு அனுப்புகின்றன.