87
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி கொண்டிருந்தது. அன்று சனிக்கிழமை மதியம் நேரம் 2.50…. அந்த பிரபலமான ஜவுளிகடைக்கு நானும், மனைவியும் சென்றோம்.
ஜவுளிகடையின் வாசலின் வெளியே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் எல்லோரையும் வரவேற்று கொண்டிருந்தார். குழந்தைகளுக்கு பலூனும், சாக்லெட்டும் கொடுத்து உற்சாகப்படுத்தினார். நாங்களும் அவரை கடந்து ஜவுளிகடைக்குள் நுழைந்தோம்.
குளிரூட்டபட்ட அந்த பெரிய ஹால், மதியம் வெயிலுக்கு இதமாக இருந்தது. இரண்டாவது மாடியில் மனைவிக்கான புடவையை எடுத்து கொண்டிருந்தேன். என் மனதில் வெளியில் நிற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவையே சுற்றி சுற்றியே வந்தது.
மாடியில் இருந்து கீழே பார்த்தேன். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அருகில் இருந்த மரத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்.
அடுத்த ஒருமணி நேரத்தில் எங்களுக்கான துணிகளை எடுத்து கொண்டு கேஷியர் இருக்கும் இடத்திற்கு வந்தேன். பணம் கட்டியதற்கான ரசீதை வாங்கினேன்.
” சார்… உங்கள் முதலாளி அறை எங்குள்ளது. அவரை பார்க்கணும்…” என்றேன் நான்.
” முதல் மாடியில் மூன்றாவது உள்ள அறையில் இருப்பார் சார்…” என்று சொன்னார் கேஷியர்.
முதலாளியின் அறைக்குள் நுழைந்தேன். கம்யூட்டரில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தார்.
” வணக்கம் சார்…”
” வணக்கம்… என்ன விஷயம். உள்ளே வாங்க…” என்று அழைத்தார்.
” சார்… ஒரு விஷயம் சொன்னால் தவறாக நினைக்காதீங்க… உங்க ஜவுளிகடையில் வெளியே நின்று எல்லோரையும் வரவேற்று கொண்டிருக்கும் அந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவரை, வெளியில் நிற்க வைக்காமல், ஹாலினுள்ளே நிற்க வைக்கலாமே…? வெயில் அதிகமான நேரம் இது. இந்த ஏசியில் நாம் இருப்பதினால் அதன் தாக்கம் தெரியாது. ஒரு மணிநேரமாக அவர் படும் வேதனையை நான் பார்த்தேன். மனசுக்கு கஷ்டமாக இருந்தது…”
நான் சொல்வதை அமைதியாக கேட்டார் ஜவுளிகடை முதலாளி. பிறகு என்னை பார்த்து சொன்னார்.
” நீங்க சொல்வது சரிதான். எங்கள் கடையின் வியாபாரத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் தான் இவர்களை பயன்படுத்துகிறோம். அதற்கான சம்பளத்தையும் கொடுக்கிறோம். ஆனால் அவர்களின் உணர்வுகளையும், வேதனைகளையும் நாங்கள் அறிவதில்லை. நீங்க அதை புரிய வச்சிருக்கீங்க. இப்போதே அவரை உள்ளே அழைக்கிறேன்…” என்று சொன்னவர் தன் மேஜையின் மேல் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார்… அழுத்தமாக.
-
நாகர்கோவில் கோபால்
add a comment