இந்தியா

அலங்கார ஊர்தி நிராகரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம்

48views

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .

டெல்லியில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின நிகழ்ச்சியில் செல்லும் வாகனப் பேரணியில் தமிழ்நாடு , கேரளா , ஆந்திரப் பிரதேசம் , மேற்கு வங்க மாநிலம் ஆகிய மாநிலங்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதற்கு அதிருப்தி தெரிவித்து தமிழ்நாடு , கேரளா , மேற்கு வங்க மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர் . மேலும் , மாநிலங்களிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர் .

இந்தநிலையில் , மத்திய அரசு வட்டாரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . அதில், தங்கள் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மாநில முதல்வர்கள் தரப்பிலிருந்து எழுதப்பட்ட கடிதங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன .

இந்த விவகாரம் தவறுதலாக மாநிலப் பெருமைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது . மேலும் , இதனை மத்திய அரசு மாநில மக்களுக்கு செய்த அவமரியாதையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது .

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று செய்யப்படுகிறது . மாநில முதல்வர்கள் இதுபோல கடிதம் எழுதுவது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் பிரச்னைகள் இருப்பதுபோல உருவகம் ஏற்படும் . இது ஒரு தவறான முன்னுதாரணம் .

இது இந்த நாட்டின் கூட்டாச்சித் தத்துவத்தை நீண்ட காலத்துக்குப் பாதிக்கும் . இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர்களுக்கு எந்த நேர்மறையான விருப்பங்களும் இல்லாவிட்டாலும் தவறான தகவலைப் பரப்பும் இந்த யுக்தியை ஒவ்வொரு ஆண்டும் செய்கிறார்கள் .

ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிலிருந்து வரும் மாநில அலங்கார ஊர்திகளை கலாசாரம், இசை, கலை, சிலை உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து இதுகுறித்து முடிவு செய்யும்.

வல்லுநர்கள் குழு இந்த ஊர்தியின் அடிப்படையான கருத்தாக்கம், வடிவமைப்பு, காட்சியின் தாக்கம் போன்றவற்றை ஆய்வு செய்து முடிவு செய்யும். 2022 குடியரசு தின விழாவுக்கு 56 பரிந்துரைகள் வந்தன. அதில் 21 பரிந்துரைகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் படைப்புகள் வல்லுநர்கள் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!