அறிமுக டெஸ்ட்டில் சதமடித்து அசத்தல் : டெவன் கான்வேயின் 136 நாட் அவுட்டினால் நியூசிலாந்து டாப்
இங்கிலாந்துக்காக அறிமுக டெஸ்ட்டில் ஆடும் வலது கை வேகப்பந்து வீச்சாலர் ஆலி ராபின்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேன் வில்லியம்சன் லெஜண்ட் ஆண்டர்சன் பந்தில் பவுல்டு ஆனார்.
2019-க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்க ரசிகர்கள் மைதானத்துக்கு வந்தனர்.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் எடுக்க டாம் லேதம் (23) ரன்களில் ஆலி ராபின்சன் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆகி வெளியேறினார். பிறகு ராபின்சன், ராஸ் டெய்லரை (14) உணவு இடைவேளைக்குப் பிறகு இன்ஸ்விங்கரில் எல்.பி. செய்து வெளியேற்றினார்.
ஆனால் கான்வே மிகப்பிரமாதமாக ஆடினார், ரன்களை கொஞ்சம் வேகமாக எடுத்தார், முன்னால் வந்து ஆட வேண்டிய ஷாட்களை முன்னால் வந்தும் பின்னால் சென்று ஆட வேண்டிய புல் ஷாட், பேக்ஃபுட் பஞ்ச், கட் ஷாட்களை மிகப்பிரமாதமாக செயல்படுத்தினார் டெவன் கான்வே. அறிமுக டெஸ்ட்டில் சதம் அடிக்கும் 12வது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார், இவர் ஆடுவதைப் பார்த்தால் அறிமுக டெஸ்ட் போல் இல்லை. அத்தனை உறுதியும் தீர்மானமும் இவரது கால் நகர்த்தல்களில் ஷாட் தேர்வுகளில் காண முடிந்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட்டில் சதம் காணும் 6வது வீரர் ஆனார் டெவன் கான்வே. அதுவும் 98 ரன்களில் இருந்த போது ராபின்சன் வீசிய பந்தை அவர் அடித்த ஹைபிளிக் ஷாட் இவர் ஒரு நட்சத்திர அந்தஸ்து பெறும் எதிர்கால பேட்ஸ்மென் என்பதைக் காட்டியது, பந்து பவுண்டரிக்குப் பறக்க தன் முதல் சதத்தை எடுத்தார்.
டெவன் கான்வேயும் ஹென்றி நிகோல்சும் ஆட்டமிழக்காமல் 132 ரன்களைச் சேர்த்துள்ளனர், நிகோல்ஸ் 149 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
6500 பேர் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர், இங்கிலாந்து அணியில் ராபின்சன், விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பிரேசி அறிமுகமாகியுள்ளனர்.
தொடக்கத்தில் கான்வே, லேதம் இணைந்து 58 ரன்களைச் சேர்த்தனர். வில்லியம்சன், ஆண்டர்சன் பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டு அவரது 615 வது விக்கெட்டாக முடிந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் அலிஸ்டர் குக் சாதனையான 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதை சமன் செய்தார்.
டெவன் கான்வே 91 பந்துகளில் அரைசதம் கண்டு 163 பந்துகளில் சதம் கண்டார், இவர் தென் ஆப்பிரிக்காவை பூர்விகமாகக் கொண்டவர். சில சமயங்களில் மார்க் உட்டின் அதிவேக பந்துகளுக்கு கொஞ்சம் திணறினார், மற்றபடி இவரது பலவீனத்தை அவ்வளவு எளிதில் கண்டுப்பிடித்து விட முடியாது என்று ஆடுகிறார். ட்ரைவ் ஷாட்கள் எல்லாமே டச் ஷாட்கள்தான். ஆஃப் சைடு, லெக் சைடு என்று 14 பவுண்டரிகளை விளாசினார்.
நியூசிலாந்து அணி ஆட்ட முடிவில் 246/3, டெவன் கான்வே 136 நாட் அவுட்.