கோயில்கள் - தல வரலாறு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

861views
திருத்தல புராணம்:
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் இராஜேந்திர பட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள மூலவரை திருக்குமாரசாமி, சுவேதார்க்வனேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.
மூலவர் : திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்), நீலகண்டேஸ்வரர்
அம்மன்/தாயார் : வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி), அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை
தல விருட்சம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம்
புராணப்பெயர் : எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர்
ஊர் : இராஜேந்திர பட்டினம்
மாவட்டம் : கடலூர்
தல வரலாறு :
கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். அப்போது பார்வதி அதை சரியாக கவனிக்காததால், அவளை பரதவர் குலப்பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார்.
இக்குற்றத்திற்காக சிவன் முருகனை, மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். முருகன் மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு ‘உருத்திரசன்மர்” என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்தபோது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.
கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் ‘குமாரசாமி” ஆனார். உருத்திரசன்மரின் உருவமும் இத்தலத்தில் அமைந்துள்ளது.

தலப்பெருமை :
ராஜராஜ சோழன் புத்திரபாக்கியம் வேண்டி இத்தல ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தான். இதனால் இத்தலத்திற்கு ராஜேந்திரபட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது.
சுவேதன் என்ற அரசனுக்கு முன்வினைப்பயனால் வெண்குஷ்டம் ஏற்பட்டது. சிவபக்தனான இவன் எருக்கத்தம்புலியூர் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து, நோய் நீங்கப் பெற்றான். எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தியுண்டு.
அறிவில் சிறந்த முருகப்பெருமானுக்கு ஊமைத்தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம், கோபம் முதலியவற்றால் பேசத் தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்தால் நிவாரணம் பெறலாம்.
பிரார்த்தனை :
பேச்சில் குறைபாடு உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இத்தலத்தில் உள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :
வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
  • பாலசந்தர்,
    மண்ணச்ச நல்லூர்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!