தமிழகம்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகன் கைது – 18 கிலோ நகைகள் மீட்பு

51views
சென்னை அரும்பாக்கம் வங்கி நகைக்கடன் பிரிவில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டார். இவர் இதே வங்கியின் ஊழியர் ஆவார். ஏற்கனவே இவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் இருந்து இதுவரை 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டன.
சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, ‛பெட் பாங்க்’ என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் (ஆக.,13) பட்டப்பகலில் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள், பணியில் இருந்த மூன்று ஊழியர்கள் மற்றும் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கத்திமுனையில் கட்டி போட்டு, லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
இதில் வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்த முருகன் என்பவர், தன் கூட்டாளிகளுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கொள்ளையடித்த நகையுடன் காரில் தப்பி செல்ல, முருகனுக்கு உதவியதாக அவரது நண்பர் வில்லிவாக்கம் பாலாஜி, 28, சந்தோஷ் , 30, சக்திவேல் ஆகிய 3 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ நகை மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரும்பாக்கம் வங்கியில் ஆக.,13, பிற்பகல் 2:30 மணிக்கு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான முருகனை, சென்னை திருமங்கலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.
வங்கி கொள்ளையின்போது வங்கியில் உள்ள அலாரம் வங்கி தலைமையகத்தை எச்சரித்திருக்க வேண்டும்; ஆனால், அலாரம் எச்சரிக்கவில்லை. வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஸ்பிரே கொண்டு மறைக்க முயற்சித்துள்ளார். அதுவும் கேமராவில் பதிவாகியுள்ளது. முருகனிடம் தீர விசாரிக்கப்பட்டு, எஞ்சிய நகைகளும் மீட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!