இந்தியா

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் – முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

71views

மறைந்த கன்னட திரை உலகின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார்.

கன்னடத் திரையுலகின் மிகப் புகழ் பெற்ற நடிகரான ராஜ்குமாரின் ஐந்தாவது/கடைசி மகன் புனித் ராஜ்குமார்(46). இவர் 29 படங்களில் நடித்து கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர். நடிகர் மட்டுமல்லாது பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முகம் காட்டியவர்.

சென்னையில் பிறந்த இவர், பிறந்த ஆறு மாதத்திலேயே குழந்தை நட்சத்திரம் ஆகிவிட்டார். 1985 ஆம் ஆண்டில் பெட்டடா ஹூவு என்கிற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய புனித் ராஜ்குமார் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தபோதே மேலும் மாநில அரசின் பல விருதுகளை வென்றிருக்கிறார். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு அப்பு என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதிலிருந்து ரசிகர்கள் அவரை அப்பு என்றும், பவர் ஸ்டார் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

கடைசியாக இவர் நடிப்பில் வந்த படம் யுவர் ரத்தனா. அடுத்து ஜேம்ஸ், த்வித்வா ஆகிய படங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலையில் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

காலை 11.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜ்குமார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுமே கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.

தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம் என இந்திய திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் அறிவித்திருக்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!