உலகம்

அமெரிக்காவில் பைடன் அரசு அதிரடி; எச்-4 விசாதாரர்களின் பணி தானியங்கி முறையில் நீட்டிப்பு: இந்தியர்கள் மகிழ்ச்சி

52views

அமெரிக்காவில் எச்-4 விசாதாரர்களின் பணி அங்கீகாரத்தை தானியங்கி முறையில் நீட்டிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வோருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். இதே போல், எச்1பி விசாதாரர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணி செய்திட எச்-4 விசா வழங்கப்படுகிறது.

முந்தைய அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த விசாவை தற்போது 90,000க்கும் மேற்பட்டோர் வைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய பெண்கள். இதற்கிடையே, முந்தைய அதிபர் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக கூறி எச்-4 விசாதாரர்களின் தானியங்கி பணி அங்கீகார நீட்டிப்புக்கு தடை விதித்தது. இதனால், பணி நீட்டிப்பு அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் நிலவியதால் பலரும் நல்ல சம்பளத்திலான வேலையை இழந்து பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட எச்-4 விசாதாரர்கள் சார்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை சார்பில், மீண்டும் தானியங்கி பணி நீட்டிப்பு அங்கீகாரம் வழங்க நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது, எச்-4 விசாதாரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என இந்திய வம்சாளியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!