தமிழகம்

“அன்புச் சகோதரர்; நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; கூட்டுத் தலைமை” – எடப்பாடிக்கு பன்னீர் அழைப்பு

66views
கடந்த ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், “அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஒரு சட்ட ஆணையரைக் கட்சி நியமிக்க வேண்டும். அதேபோல, கட்சி சார்ந்து தனிக் கூட்டம் நடத்தக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானது செல்லாது என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பி.எஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “கழகம் ஜனநாயக ரீதியில் ஒன்றுபட்டால் யாராலும் வெல்ல முடியாது என்பது நிரூபணமான ஒன்று. எங்களுக்குள் நடந்த கருத்து வேறுபாடுகளால் அதிமுக-வுக்குள் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அதில் எங்களுக்கு பெரும் பாதிப்பு தான், இருந்தாலும் பரவாயில்லை. அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இதற்கு முன் நடந்த அனைத்து கசப்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுபட வேண்டும். அம்மாவின் மரணத்துக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அவருடன் முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இன்று இரட்டை தலைமை என்பது பிரச்னை இல்லை. கூட்டுத் தலைமைதான் பிரதானம். அதற்காகத் தான் ஒருங்கிணைப்பாளர் என்பது உருவாக்கப்பட்டது. இதில் ஒற்றுமை என்னும் போது, டிடிவி தினகரன், சசிகலா என எல்லோரும் அடக்கம்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க-வில் முந்தைய நிலையே தொடரவேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இ.பி.எஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த வழக்கை வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் அளித்திருக்கின்றனர்.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!