தமிழகம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

40views
சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு மீது பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 11ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் எப்படி தலையிட முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனையடுத்து, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகே, அதிமுக பொதுக்குழு நடக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜூலை 6) நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதாடுகையில், நிர்வாகிகளின் ஆதரவை பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு எதிராக நாங்கள் செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உயர்நீதிமன்றம் தலையிட முடியும். உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எல்லை மீறி நடந்து கொண்டது என்றார்.
ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் அளிக்கும் தீர்மானங்களை மட்டும் தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியும். உச்சநீதிமன்ற வழக்கால் உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணை பாதிக்கப்பட கூடாது என்றார்.
நீதிபதிகள் கூறுகையில், ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தனி நீதிபதி தெளிவாக கூறியுள்ளார். பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்ட முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிட விரும்பவில்லை. அதிமுக கட்சி விவகாரங்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்தது ஏன்? நட்போ சண்டையோ உங்களுக்குள் நீங்களே பார்த்து கொள்ளுங்கள். உங்கள் கட்சி தொடர்பான எல்லா பிரச்னைகளை பொது குழுவில் விவாதியுங்கள், நீதிமன்றத்தில் விவாதிக்காதீர்கள். சென்னை உயர்நீதிமன்ற அதிகாரத்தை நாங்கள் எடுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது?
இந்த விவகாரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும். 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் எப்படி தலையிட முடியும்? அதிமுக.,வின் பொதுக்குழுவிற்கு எங்களால் தடை விதிக்க முடியாது. அக்கட்சியின் உள்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தை நாடலாம். பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றனர்.
இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை தொடர்ந்து வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!