இந்தியா

அட்மிரல் கரம்பீர் சிங் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்: கடற்படை புதிய தளபதி ஹரி குமார் பொறுப்பேற்பு

101views

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஆர். ஹரி குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுறுவதை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

41 வருடங்களாக கடற்படை சேவையில் இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரிடமிருந்து புதிய பொறுப்பை ஹரி குமார் ஏற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தெற்கு பிளாக்கில் நடைபெற்ற எளிய விழாவில் நாட்டின் கடற்படை புதிய தளபதியாக ஹரிகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவரை கடற்படையின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து வீரர்கள் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.

கடற்படை தளபதியாக பொறுப்பேற்கும் முன்பு மேற்கு கடற்படைப் பிராந்திய தளபதியாக ஹரி குமார் பணியாற்றி வந்தார்.

1962-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி பிறந்த ஹரி குமார், 1983-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்திய கடற்படை பணியில் சேர்ந்தார். தனது 39 வருட அனுபவத்தில் இந்திய கடலோர காவல் படையின் சி-01 கப்பல், இந்திய கடற்படைக்கு சொந்தமான நிஷாங்க், கோரா, ரன்வீர், விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட் ஆகியவற்றில் கமாண்டராக பதவி வகித்துள்ளார்.

இவர் இந்திய கடற்படையின் 25-வது தளபதி ஆவார். அமெரிக்காவில் உள்ள நேவல் வார் கல்லூரி, மத்தியபிரதேசத்தில் உள்ள ஆர்மி வார் கல்லூரி, பிரிட்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் டிபன்ஸ் ஸ்டடீஸ் ஆகியவற்றில் பல்வேறு படிப்புகளை முடித்துள்ளார் ஹரி குமார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!