வலிமை வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அஜித்தின் எந்தவொரு படத்தின் சேட்டிலைட் உரிமையையும் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி வாங்காததில் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
படத்தின் பாடல்களும், ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் 24-ம் தேதி வெளியாகும் வலிமை படத்தை திரையில் காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இது ஒருபுறமிருக்க, அஜித்தின் பெரும்பாலான படங்களின் சேட்டிலைட் உரிமைகள் சன் டிவி வசம் உள்ளன. சிவா இயக்கத்தில் அவர் நடித்த விஸ்வாசம் திரைப்படம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. முன்னணி நடிகரான அஜித்தின் படங்களை வாங்க பல சேனல்கள் போட்டி போடும் நிலையில், முன்னணி பொழுதுப்போக்கு தொலைக்காட்சியான விஜய் டிவி இதுவரை எந்தவொரு அஜித் படத்தையும் வாங்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.