108
ஹாலிவுட்:
கடந்த ஆண்டுகளில் வெளியான அமெரிக்க த் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கதாய் சம்வேர், , பிரிசியஸ் ஆகியவற்றைச் சொல்லலாம். சம்வேர் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது.
ஹாலிவுட்டின் திரைப்பட நடிகரான ஜானி வழக்கமான திரைப்பட நட்சத்திரத்தின் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டவன். மனைவியுடன் ஏற்பட்ட சிக்கல்களால் பெரிய விடுதி ஒன்றில் இருந்து வருபவன். அவனின் மனைவி 11 வயது மகளை அவனிடம் ஒப்படைக்கிறான்.. அவன் போகுமிடங்களுக்கு க் கூட்டிச் செல்கிறாள்.
நட்சத்திரத்தின் மகள் என்ற அந்தஸ்து அவளுக்கு மிதப்பைத் தருகிறது. அப்பா என்ற நிலையில் அவளை நன்கு கவனித்துக் கொள்கிறான். விளையாட்டும், பொழுது போக்குமாய் கழிகிறது. ஜானியின் பெண் சிநேகிதிகளும், அவர்களுடனான விளையாட்டும் தொடர்கிறது. அவையெல்லாம் மகளின் பார்வையிலிருந்து தப்புவதும் இல்லை. திரைப்பட விழாக்கள், கைரேகை, கால்ரேகை பதிப்பு நிகழ்ச்சி நடிகைகளுடனான ஸ்டில் எடுக்கும் நிகழ்வுகள், பெரும் தயாரிப்பாளர்களைச் சந்திப்பது என்று பொழுதைக் கழிக்கிறாள்.
மகள் இல்லாத தனிமையைச் சட்டென உணர்ந்தும் பார்க்கிறான். அவனை உலுக்கி விடுகிறது. சொகுசோ, பணமோ ஆடம்பரமோ குறைவில்லாத நிலையில் மனைவியில்லாத தனிமை அவனை உறுத்தவே செய்கிறது. மகளை விடுமுறையைவிட்டு ப் பிரிகிறபோது அந்த உறுத்தல் அவனை அழுகைக்குள்ளாக்குகிறது. இறுதிக் காட்சியில் விலை உயர்ந்த காரில் சென்று கொண்டிருப்பவன் காரை நிறுத்திவிட்டு நடந்து போகத் துவங்குகிறான். கதாநாயகனின் பெண்களுடனான நெருக்கமான காட்சிகளும், விடுதி அறையின் கட்டில் கம்பிகளில் பெண்களின் நிர்வாண நடனமும். லாஸ் ஏஞ்சல் ஸ் முதல் இத்தாலி வரையிலான கதாநாயகனின் பயணங்களும் சுவாரஸ்யமானவை.
தன்னை நடிகன் என்று கண்டுகொள்வதால் ஏற்படும் வெறுப்பை இப்படத்தின் பல காட்சிகளில் காண முடியும் . பணம், புகழ் , வெற்றி என்று மிதப்பவன் அவன். பெராரி கார் மிக வேகமாக ச் செல்வதில் பெயர் பெற்றது.அதில் ஏறி பிற கார்களை விரட்டுவதில் அவனுக்கிருக்கிற பிரியம் அலாதியானதுதான். மதுவும் தேடிவரும் பெண்களும் அவனை எப்போதும் மிதக்கச் செய்து கொண்டே இருக்கிறார்கள். பிரிந்து போய் விடுகிற மனைவி. ,திடீரென்று ஒருநாள் தன்னிடம் வந்து சேர்கிற மகள். மகள் தன்னுடன் இருக்கிறபோதே அவன் தன்னை தந்தை என்று அடையாளம் கண்டு கொள்கிறான்.
அவளுக்கு நீச்சல் பயிற்சி, பாலே நடனப் பயிற்சி , ஓவியக் கண்காட்சிகள், விருந்துகள் என்று அவளைத் திருப்திப்படுத்துகிறான். மகளும், பிரிந்து விட்ட மனைவியும் இல்லாதபோது தன்னை அந்நியனாகவே இனம் கண்டு கொள்கிறான். வேகத்திற்குப் பெயர் பெற்ற பெராரி காரை பாலைவனத்துச் சாலையின் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு எவ்வித இலக்குமின்றி நடக்கிறபோது அவன் ஒரு சாதாரண மனிதனாக இனம் கண்டுகொள்கிறான்.
இதன் இயக்குநர் ஷோபியா கப்போலாவின் முந்தின படமான தி லாஸ்ட் டிரான்ஸ்லேசன் குறிப்பிடத்தக்கது. சம்வேர் படத்திற்கு ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் அமெரிக்க பெண் இயக்குநர் என்ற அளவில் பெருமை பெற்றவர். வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்தப் பட பரிசு பெற்றதன் மூலமும் சர்ச்சைக்குள்ளானவரானார்.
வெனிஸ் திரைப்படவிழா தேர்வுக்குழு த் தலைவர் நெருக்கமானவர் என்பதால் சர்ச்சை பரிசு குறித்து எழுந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சம்வேர் பட இயக்கத்தில் ஈடுபட்டவர், மாடலிங் உள்பட பல தொழில்களில் இருந்தவர் என்ற வகையில் அவர் மீதான சர்ச்சை பெரிதாக்கப்படவில்லை. ‘காட்பாதர்’ போன்ற படங்களை இயக்கிய கப்போலாவின் மகள் தான் இந்த ஷோபியா.
ஆறு ஆஸ்கார் அகாதெமி விருதைப்பெற்ற அமெரிக்கப் படமான ‘பிரிசியஸ்’ சபையரின் நாவலை மையமாகக் கொண்ட திரைப்படம். அதிக எடை கொண்ட பதினாறு வயதுப் பெண் பள்ளியிலிருந்து இரண்டாவது முறை கர்ப்பமடைந்த காரணம் காட்டி வெளியேற்றப்படுகிறாள். பள்ளியில் சக வயதினர் நிகழ்த்தும் சாசகங்கள் .தந்தை சிரமத்தில்தான். வேலையில்லாத அம்மாவும் அவளை வார்த்தைகளால் காயப்படுத்துபவள்.
வீட்டை விட்டு வெளியே துரத்துவதில் கண்ணாக இருப்பவள். மாற்றுப் பள்ளியொன்றில் வசை ச்சொற்பிரயோகங்களும் அவளை பள்ளியிலிருந்து துரத்துகிறது. அவளின் முதல் கர்ப்பத்தைப் போலவே இரண்டாம் கர்ப்பத்திற்கும் காரணம் அவளின் சேர்க்கைகள் அங்குள்ள ஆசிரியரும், தாதிப் பெண் ஒருத்தியும் அவளுக்கு ஆறுதலாக இருக்கின்றனர். வீட்டைவிட்டு வெளியேறுபவளுக்கு கிறிஸ்துவ தேவாலயத்தின் குழுப் பாட்டும் இசையும் ஆறுதலாக இருக்கிறது.
அம்மா அவளை சமூக நல அலுவலகத்தில் சந்திக்கிறபோது அவள் அப்பா எயிட்ஸால் செத்துவிட்டதாகத் தகவல் சொல்கிறாள். மகளும் தன் குழந்தையின் எயிட்ஸ் பாதிப்பைச் சொல்கிறாள். அவள் பற்றிய விவரக் கோப்பொன்றை அலுவலகத்திலிருந்து திருடி, நெருக்கமான இரு பெண்களிடம் காட்டுகிறாள். அவர்கள் தரும் ஆறுதல் அவள் வாழ்க்கையை நடத்த ஏதுவாகிறது. கருப்பினப் பெண் ஒருத்தியின் சொல்லவியலாத கொடுமைகள் அடங்கிய வாழ்க்கையை இதன் இயக்குநர் லீ டேனியல் இப்படத்தில் வைத்திருக்கிறார்.
நாவலின் மையத்தைச் சரியாக வெளிக் கொணர்ந்ததன் மூலம் கறுப்பின சமூகம் பற்றின பார்வை சரியாக முன் வைக்கப்பட்டிருக்கிறது இதில். 35 லட்சம் மில்லியன் டாலர் சம்பளம் பெறும் ஒரு ஹாலிவுட் நடிகையின் வாழ்க்கை ஒரு புறம் இப்படி . இன்னொருபுறம் அதே அமெரிக்க சமூகத்தில் வாழும் ஒரு கருப்பினப் பெண் தன்னை சாதாரணமானவளாகக் காட்டிக் கொள்ளவே துயரங்களை மறைத்து நடிக்கும் நடிகையாக வேண்டியிருக்கிறது.
இந்திய வம்சவளி இயக்குநர் மனோஜ் நைட் சியாமளனின் ‘ஏர் பைண்டர்’ தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு வெற்றியைத் தழுவியது. டாய்ஸ் ஸ்டோரி படத்தின் மூன்றாம் பாகமும் இவ்வாண்டு பெரும் வெற்றி பெற்று அனிமேசன் படங்களுக்கான வெற்றியைச் செய்தியாய் சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஹாரி பாட்டர் படங்களும், ‘ தி கராத்தே கிட்’ மறு உருவாக்கமும் உயர்ந்த தேர்ந்த தொழில்நுட்ப்ப் படங்களின் (ஸ்கை லைன்) தோல்வியைத் தாண்டி குழந்தைகளை மையமாகக் கொண்டவற்றின் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது. “ இன்சப்ஷன் “ போன்ற படங்களின் வெற்றி நம்பிக்கை தந்திருக்கிறது.
சிஐஏ பிரதிநிதிகளை கதாநாயகர்களாகக் கொண்டு ரஷ்யா, வியட்நாம், க்யூபா, போன்ற நாடுகளில் சாகசச் செயல்கள் செய்யத் தேவையில்லாது போய்விட்டது. உலகின் கடைசி ராட்சத மிருகங்கள் போன்றவற்றைக் காட்டி மிரட்டிவிட்டு ஹாலிவுட் அலுத்துப் போயிருக்கிறது. இனி ஜீலியன் அசாஞ்ச்சின் விக்கிலீக்ஸ் வெளித்தள்ளியிருக்கும் தகவல்கள் கதைச்சுரங்கமாகும் அவர்களுக்கு.
ஹாங்காங்கின் இரவுகள்:
ஆண்கள் மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விடயமாகிவிட்டது. அவ்வகையானவிடயங்களும் , வழக்குகளும் அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன.
முஸ்லிம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்பப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத் தன்மையும், ஒத்துவராத குணமும் குடும்பத்தில் பிரச்னைகளாகி வன்முறை ரூபம் எடுக்கின்றன.
கவனித்தும், அனுபவித்தும் கற்றுக் கொள்கிற சமூகப் புரிதல் இல்லாமல் போவதால் இது அதிகரிக்கிறது.ஆணாதிக்க மேலாண்மையும், அதிகாரமும் உச்ச பட்ச நிலையை இதனால் எட்டுகின்றன.இது தரும் மன்அழுத்தமும், அதன் வடிவான மன நோயும் சாதாரணமாகி விடுகிறது .
வேறொரு புறம் இது குழந்தைகள் மீதான வன்முறையாயும் வளர்கிறது. குழந்தைகள் மீதான இந்த வன்முறை ஆண்டுதோறும் 4 மில்லியன் குழந்தைகளைப் பாதிக்கிறது. எழுபதுகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பெண்ணிய இயக்கங்கள் இதை ஓரளவு கட்டுப்படுத்தி சட்டநியதிகளைக் கொண்டு வந்திருக்கிறது.. குடும்பப்பெண்கள், குழந்தைகள் மீதான வன் முறையின் உச்சமாக் “ நைட் அண்ட் போக்” படம் தென்பட்டது.
“ நைட் அண்ட் போக்’ .” ஹாங்காங்கின் இரவுகள் :
ஒரு கணவன் தன்னை மறுபரிசீலனை செய்து கொண்டு இப்படத்தில் சொல்லும் வசனம்: “ நல்ல கல்வியறிவு இல்லாததே என்னை இப்படி முரடனாக்கியிருக்கிறது”
பையனைப் பள்ளிக்கு அனுப்பும் வேலையில் மனைவி அடிக்கடி சொல்வாள்: “ மகனையாவது நன்கு படிக்க வைக்கவேண்டும் “ என்று .
நிஜக் கதையொன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘நைட் அண்ட் போக்’ . மனைவி, இரு குழந்தைகள் உள்பட ஒரு குடும்பத்தையே கொலை செய்து விடுகிற கணவனின் முரட்டு வாழ்க்கை பற்றியது. முரட்டுத்தனமான கணவர்களின் குறியீடாய் கூட அவன் திகழ்ந்து விடுகிறான்.
நம்மூர் நிஜ வில்லன்களின் ஒரு பரிமணமாக அந்தக் கணவன் இருக்கிறான். வழக்கமான கணவனாகவே இருக்கிறான். அவனின் முந்தைய திருமணத்தால் பிறந்து வளர்ந்த பையன் இருக்கிற நிலையில் விவாகரத்து பெற்றவன். மீனை சமையலில் வறுத்தது தவறு. .வேக வைத்திருக்க வேண்டும் என்று சண்டை போட்டு மனைவியை அடிக்கிறான். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பணத்தைக் கட்டாமல் குழந்தைகளுக்கும் சங்கடமளிக்கிறான்.
மனைவியின் கைகளைக்..கட்டி படுக்கையில் கிடத்தி உறவு கொள்வது அவனுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. அவன் வேலையில்லாதவன் என்பதால் கிடைக்கும் பென்சன் அவனுக்கு இன்னும் பிடித்தமானதாக இருக்கிறது. சமூக ப் பாதுகாப்பு அலவன்சு அவனுக்கு வேலைக்குப் போகும் அவசியத்தை வற்புறுத்துவதில்லை. மனைவி வேலைக்குப் போவது அவனுக்கு பிடிக்கவில்லை.பெண்ணாய் பலர் முன் நடமாடுவது அவனுக்கு இன்னும் பிடிக்கவில்லை. மனைவி அடி தாங்காமல் தத்தளிக்கிறாள்.
பக்கத்துப் போர்ஷன் பெண் காவல்துறை புகார் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறாள். மனைவி நிலைமை மீறும் போது அதையும் செய்து விடுகிறாள். காப்பகத்தில் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். மனைவி அவளின் சகோதரி வீட்டில் தங்குகிறாள். கணவன் அங்கு வந்து கலாட்டா செய்யவும் குடும்ப ஆலோசனை மையத்திற்கு ச் செல்கிறாள். கணவன் அப்பாவியாக தனது சிறு தவறுகளைப் பெரிதாக்கிவிட்டாள்.
அவளைப் பொன் போல பார்த்துக் காப்பாற்றுவதாக உறுதிமொழி தருகிறாள்.வீட்டுகுத் திரும்பிய பின் வீட்டில் மறுபடியும் கணவனின் ரகளை, அடி உதை. கையில் காயங்களுடன் அவள் மீண்டும் பிரிந்து ஒரு காப்பகத்தில் சேருகிறாள். அங்கிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் காப்பகத்தில் நடக்கின்றது. அவள் சின்ன வயது நினைவுகளில் முழ்கிப் போகிறாள்.
அவளின் சின்ன வயது அனுபவங்களை அவள் நினைத்துப் பார்க்கவே ரம்மியமாக உணர்கிறாள். ஹாங்காங்கிற்கு வேலை கிடைத்து திரும்புகிறவள் ஒரு தொலைக்காட்சி ப் பெட்டியோடு திரும்புகிறாள். அடுத்த முறை கிராமத்திற்கு வரும்போது தன் கணவனாய் வருகிறவனை அழைத்து வருகிறாள். கிராமத்தில் அவனுக்கு என்ஜினியர் என்று பெயர். அவளின் ஓட்டு வீட்டை ப் பராமரித்து கட்டிட வேலைகளைச் செய்கிறான். ”இன்ஜினியர்” . சாப்பாடு தாமதமாகிறது, தேவையான பணம் இல்லை என்று தெரிகிற போது அவன் வீட்டு நாய் மீது எரிச்சலைக் காட்டி க் கொல்வது வீட்டில் அனைவர்க்கும் அதிர்ச்சி தருகிறது. மனைவியின் தங்கை மீதும் ஒரு கண் அவனுக்கு.
கிராம வாழ்க்கையை மீறி நகரத்தில் வேலை அமைந்து ஆசுவாசம் கொள்கிறாள். காப்பகப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறார்கள். உளவியல் பாதிப்பு கொண்டவர்களாய் நடந்து கொள்கிறார்கள். மனவியாதியின் உச்சத்தில் இருந்து கொண்டு நடமாடுபவர்களும் அங்கு இருக்கிறார்கள். அந்த ச் சூழல் அவளுக்கும் குழந்தைகளுக்கும் அச்சம் தருவதாக இருக்கிறது. கணவன் வேறு கைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறான்.
கணவனை நம்பி வீட்டுக்கு வருகிறாள். தன்னை அவமானப்படுத்தியதாகச் சொல்லி அடிக்கிறான். உச்சமாய் இரு குழந்தைகளையும் அவளையும் கணவன் கத்தியால் குத்திக் கொல்கிறான். முதல் மனைவி மூலம் பிறந்த மகனை பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு அப்பா பற்றிக் கேட்கிறார்கள். “ நான் அவர் மகன் அல்ல” என்கிறார்.
கிராமத்தில் அப்பெண்ணின் அப்பா எல்லா சோகத்தையும் சுமந்தவராக ஓடி விளையாடும் முயலைப் பார்த்தபடி பீடி குடித்துக் கொண்டிருக்கும் இறுதிக் காட்சியோடு படம் முடிகிறது. படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் மனைவி மீதான வன்முறை உச்சமாய் காட்டப்பட்டிருப்பது பதற்றத்திற்குள்ளாக்குகிறது. பெண்கள் மீதான வன்முறை குறித்த ஒரு பிரச்சார இயக்கம் பற்றின ஓர் இடமும் படத்தில் இடம் பெறுகிறது.
ஹாங்காங் சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி வெகு சாதாரணமாகச் சொல்லும் படம் இது. அதே சமயம் கும்பல் வன்முறை என்பது நிலைபெற்றிருக்கிற நகரமும் அது. முதலாளித்துவ பொருளாதாரம் கோலோச்சும் நகரம். இங்கிலாந்துக்கு இணையாக கல்விமுறை பயிற்சியும் சிறப்பாக இருப்பதாக ச் சொல்லப்படுகிறது.
கிழக்கும் மேற்கும் சந்திக்கும் உலகமாகவும் பல விதங்களில் அமைந்திருக்கிறது. உலக வியாபார கேந்திரத்தின் ஒரு முக்கியமான நகரமாகிவிட்டது. கேளிக்கை நடவடிக்கைகள் மூலம் அந்நகரம் பெறும் வருவாய் என்பது முக்கியமானதாக இருந்து கொண்டு உலகப் பணக்கார மக்களை அந்த நகரத்திற்கு விரட்டிக் கொண்டே இருக்கிறது.இப்படத்தில் இடம் பெறும் இரவுக் காட்சிகள் ஒரு நகரத்தின் கேளிக்கைப் பரிமாணத்தையும், மறுபுறம் வன்முறையின் முகத்தையும் நாணயத்தின் இரு பக்கங்கள் போலக் காட்டுகின்றன.
ஒரு கணவன் தன்னை மறுபரிசீலனை செய்து கொண்டு இப்படத்தில் சொல்லும் வசனம்: “ நல்ல கல்வியறிவு இல்லாததே என்னை இப்படி முரடனாக்கியிருக்கிறது” என்பது என்னை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்தது.
சுப்ரபாரதிமணியன்
add a comment