தமிழகம்

தென்காசியில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

122views
தென்காசியில் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டித்து இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி மாவட்டத்தின் கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகமான அளவில் கொண்டு செல்லப்படுவதால் தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெருக்கடி, சாலைகள் சேதம், பல விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டித்தும், இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இயற்கை வளங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரமான ரவி அருண் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜமீன் முன்னிலை வகித்தார். கனிம வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் பல சமூக அமைப்புகள், இயற்கை ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இயற்கை ஆர்வலர்கள் கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அழிந்து கொண்டே வருகிறது. இதே நிலைமை நீடித்தால் அடுத்த தலைமுறைகளுக்கு இயற்கை வளம் என்றால் என்ன என்று தெரியாமல் போய்விடும். அடுத்த தலைமுறையினர் பாலைவனத்தில் வாழக்கூடிய சூழல் ஏற்படும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை பதிவு செய்து கண்டனம் தெரிவித்தனர். மேலும் கேரளாவில் இருந்து ஒரு பிடி மண்ணை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முடியுமா? என கேள்வியும் எழுப்பி உள்ளனர். தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி இயற்கை வளமிக்க பகுதியாக விளங்கும் தென்காசி மாவட்டத்தையும், அதன் கனிம வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!