உலகம்

துபாயில் “எளியோர் எழுச்சி நாள்” விழா திமுக அயலக அணி கொண்டாட்டம்! அமீரகத் திமுக அமைப்பாளார் , எஸ். எஸ். மீரான் ஏற்பாடு.

24views
துபாயில் 27/11/24 புதன் கிழமை அன்று, அமீரகத் திமுக சார்பில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் ‘கேக்’ வெட்டி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  பிறந்தநாள் விழாவுக்கான சிறப்பு அலங்காரமாகக் கறுப்பு, சிவப்பு பலூன்களால் புதுமையாகவும் வித்தியாசமாகவும் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அமீரகத் திமுக அமைப்பாளரும்,அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பிறந்தநாள் விழாவை ஆர்.ஜே. அஞ்சனா தொகுத்து வழங்க, விழாவிற்கு வந்திருந்தவர்களை ஏஜிஎம் பைரோஸ்கான் வரவேற்றுப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துபாய் அரசின் பொருளாதாரத் துறை பிரிவின் முதன்மை மேலாளர் ஒமர் முஹம்மது கஃபலி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிறந்த நாள் காணும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடுகள் இருப்பதையும், தமிழ்நாடு மற்றும் துபாய் இடையிலான பொருளாதார உறவையும் வியந்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இது போன்றதொரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த எஸ்.எஸ்.மீரான் அவர்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு இந்நிகழ்ச்சிக்காகவே அழைக்கப்பட்டிருந்த, “என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல் கிழக்கு ஒன்றியத் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு. மோகநிதி சிறப்புரையாற்றினார்.
“மாநில அளவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பின் நான் அருகில் உள்ள மாவட்டங்களுக்குக் கூடச் செல்லவில்லை. என்னுடைய முதல் நிகழ்வே துபாய் மண்ணில்தான் ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முயற்சி எடுத்த அமீரகத் திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தன் பேச்சைத் தொடங்கியவர், தந்தை பெரியாரின் கொள்கையை, அண்ணாவின் வழியை எப்படி முறைப்படி சட்டமாக்கி, அதனை வெகுஜன மக்களுக்குக் கொண்டு சென்ற முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் வழிநின்று, இன்று திராவிட மாடல் அரசின் முதல்வராக தமிழ்நாட்டை திறம்பட வழிநடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பணிகளையும், அவரின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் எடுத்துரைத்தார்.
முதல்வரின் வழியில் தற்போதைய கழகத்தின் மாநில இளைஞர் அணிச் செயலாளர், கழக உடன் பிறப்புகளால் சின்னவர் என அன்போடு அழைக்கப்படக்கூடிய, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உழைப்பையும், திமுக இளைஞர்கள் பாசறைகள் மூலமாகத் திராவிட இயக்கக் கருத்தியலை இன்றைய‌ இளைஞர்களுக்குக் கொண்டு செல்ல அவர் எடுத்திருக்கும் முயற்சிகளையும் வெகுவாக வியந்தார்.
“கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் “எங்கெல்லாம் அங்கீகாரம் மறுக்கபட்டதோ, அங்கெல்லாம் அவர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்று இன்று தமிழ்நாட்டு மக்களின் துணைமுதலமைச்சராக திறம்படச் செயலாற்றி வருகிறார்” என்று குறிப்பிட்ட அவர்,
“திமுக என்பது‌ இளைஞர்களுக்கானது. அறிஞர் அண்ணா திராவிடக் கொள்கையைப் பேசிய போது வயது நாற்பது, கலைஞரின் வயது 25 கட்சியின் உயர்மட்டத்தில் இருந்த‌ தலைவர்களின் வயதெல்லாம் முப்பதுக்கும் குறைவு. ஆகவேதான் எதிர்காலத்தில் கருத்தியல் ரீதியிலான போரை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்த அவர், மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துத் தன் சிறப்பான உரையை நிறைவு செய்தார்.

வாழ்த்துரை வழங்கிய அமீரகத் திமுக அமைப்பாளரும், அயலகத் தமிழர் நலவாரிய குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் அவர்கள், “மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டு, ஒரு செங்கல்லை வைத்துக் கொண்டு, எப்படியெல்லாம் ‘பாசிஸத்தை’ எதிர்கொண்டார்” என்பதையும், “2024இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் செமி ஃபைனல் எனவும், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் ஃபைனல்” என உதயநிதி அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்து, அவரின் ஒவ்வொரு விசயங்களுக்கும் கழக உடன் பிறப்புகள் உறுதுணையாக இருக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
முன்னதாகப் பேசிய சிறப்பு விருந்தினர் ஒமர் முஹம்மது அவர்கள் தன் உரையில் சீஃப் மினிஸ்டர் என்பதற்குப் பதிலாக ப்ரைம் மினிஸ்டர் என்று உதயநிதி அவர்களைக் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், ‘அவரது ஆரூடம் பலிக்கட்டும்’ என்று பலத்த கரவொலிக்கிடையில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ‘கானல் அமீரகம்’ குழுவின் ஆசிப் மீரான், தொழில் அதிபர் ஜெஸிலா பானு, ‘முஸ்லிம் லீக்’ பரக்கத் அலி, கவிஞர் சசிக்குமார், கல்லிடைக்குறிச்சி முஹைதின், ‘புர்ஜ் கலிஃபா’ முபாரக், ‘தமிழ் எஃப் எம்’ மகேந்திரன், பொறியாளர் பாலா, இர்ஷாத், பருத்தி இக்பால், ஃபரீத், தாரிக், பாண்டியன் வீரமணி, கொரடாசேரி ஜெகபர், பொறியாளர் இஸ்மாயில், மணிவேல், பாலக்குமரன், சேக் தாவுது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
‘பிளாக் துளிப்’ செந்தில் அவர்களின் நன்றியுரையோடு நிறைவு பெற்ற இந்த நிகழ்ச்சியில் ‘உதயநிதி’ பாலா, வி கே புரம் பாலா, சேக் உதுமான் , ரெங்கராஜன், சுலைமான், , மச்சேந்திரநாதன், பன்னீர்செல்வம், அமீன், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!